சீன அதிபரின் போர் பிதற்றல்கள் ஒன்றும் புதிதல்ல: ராணுவத் தளபதி பிபின் ராவத்

சீன அதிபர் அந்நாட்டு ராணுவத்தை போருக்குத் தயாராக இருக்கும்படி உத்தரவிடுவது ஒன்றும் புதிதல்ல என இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் சனிக்கிழமை தெரிவித்தார்.
சீன அதிபரின் போர் பிதற்றல்கள் ஒன்றும் புதிதல்ல: ராணுவத் தளபதி பிபின் ராவத்

கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள காவேரி கல்லூரியில் ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா மற்றும் பத்ம பூஷண் மற்றும் டி.எஸ்.ஓ. விருது பெற்ற ஜெனரல் கோடேன்திர சுப்பய்ய திம்மையா ஆகியோரது சிலைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. 

இதில், இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டு சிலைகளைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

சீன அதிபர் ஜீ ஜின்பிங், அந்நாட்டு ராணுவத்தை எந்நேரமும் போருக்குத் தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இது ஒன்றும் புதிதல்ல. இதுகுறித்து அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

ஏனெனில் ஒவ்வொரு நாடும் தனது ராணுவத்துக்கு இதே உத்தரவுகளைத் தான் பிறப்பிக்கும். நான் கூட எந்நேரமும் போருக்குத் தயாராக இருக்க வேண்டியது அவசியம் தான். இதுதான் ராணுவத்தின் பணி. அதில் புதிதாக கூறுவதற்கு ஒன்றும் இல்லை. இதர நேரங்களில் நாங்கள் எங்களை தயார்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்துவோம் என்றார்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங், அந்நாட்டின் அதிபராக தொடர்ந்து மறுமுறையும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சீன ராணுவத்தைச் சந்தித்தவர், அவர்களை எந்நேரமும் போருக்குத் தயாராக இருக்கும்படி உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த ராணுவமாக சீன ராணுவம் விளங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி டோக்லாம் எல்லையோரம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப்பிரிவுகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதற்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த எல்லையோர பிரச்னை காரணமாக இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டு இந்தியா-சீனா எல்லைப்பகுதிகளில் பதட்டமான சூழ்நிலைக் காணப்பட்டது. பின்னர் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஆகஸ்டு 28-ந் தேதி டோக்லாம் பகுதிகளில் இருந்து சீனா தனது ராணுவத்தை திரும்பப் பெற்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com