குருகிராம் ரயான் சர்வதேச பள்ளி மாணவன் கொலை வழக்கு: 16 வயது சக மாணவன் கைது! 

தில்லியை அடுத்துள்ள குருகிராம் ரயான் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் பிரத்யுமன் தாக்கூர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 16 வயது சக மாணவன் சி.பி.ஐயால் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
குருகிராம் ரயான் சர்வதேச பள்ளி மாணவன் கொலை வழக்கு: 16 வயது சக மாணவன் கைது! 

புதுதில்லி: தில்லியை அடுத்துள்ள குருகிராம் ரயான் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் பிரத்யுமன் தாக்கூர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 16 வயது சக மாணவன் சி.பி.ஐயால் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

தில்லியை அடுத்துள்ள குருகிராம் ரயான் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த பிரத்யுமன் தாக்கூர் (7) என்ற மாணவன், அப்பள்ளியின் கழிப்பறைக்குள் கடந்த ஒரு மாதத்துக்கு முன் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டான். நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், அப்பள்ளி பேருந்து ஓட்டுநரின் உதவியாளரான அசோக் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் முயற்சியில், அவர் இக்கொலையை செய்ததாக விசாரணையில் குருகிராம் போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் பிரத்யுமனின் பெற்றோர்கள் இதுவெறும் கண்துடைப்பு கைது என்று கூறியதுடன், சிபிஐ விசாரணை கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவன் கொலை வழக்கு, சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன், குருகிராம் ரயான் பள்ளியை நிர்வாகிக்கும் பொறுப்பு, குருகிராம் மாவட்ட நிர்வாகத்திடம் தாற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், மாணவன் பிரத்யுமன் தாக்கூர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பள்ளியில் படிக்கும் 16 வயது சக மாணவனை சி.பி.ஐ இன்று கைது செய்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ  செய்தி தொடர்பாளர் அபிஷேக் தயாள் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

மாணவன் பிரத்யுமன் தாக்கூர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பள்ளியில் 11-ஆவது படிக்கும் 16 வயது மாணவன் ஒருவனை சி.பி.ஐ இன்று கைது செய்துள்ளது. படிப்பில் சுமாரான அந்த மாணவன் தேர்வுகளை தள்ளி வைக்கும் பொருட்டும், விரைவில் அப்பள்ளியில் நடக்கவிருந்த பெற்றோர் -ஆசிரியர் சந்திப்பை தள்ளி வைக்கவும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கிறான்.

குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்கள், சிசிடிவி காட்சிகள், சம்பந்தப்பட்ட மாணவனின் அலைபேசி அழைப்புகள் மற்றும் பல்வேறு சாட்சிகளிடம் நடத்திய விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.    

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமான கத்தியை சம்பவத்தன்று அந்த மாணவன் பள்ளிக்கு கொண்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அது தற்பொழுது குருகிராம் போலீசாரிடம் இருந்து பெறப்பட்டு எங்களிடம் உள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவன் தற்பொழுது சிறார் சட்ட ஆணையத்தின் முன்னால் ஆஜர் செய்யபடுவான். அங்கு அவன் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com