178 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

அஸ்ஸாம் தலைநகர் குவகாத்தியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 178 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
178 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு


குவாஹாட்டி: அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியில் நடைபெற்ற 23-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 178 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆடம்பர மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பொருட்கள் உட்பட 50 பொருட்களை மட்டுமே 28% ஜிஎஸ்டி வரியில் வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர். இதில் தமிழக அரசின் கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டிருந்தன.

இந்த கூட்டத்தில் ஜவுளிகளின் மீதான வரி 18%ல் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குஜராத் மாநிலத்தின் கோரிக்கையை ஏற்று ஜவுளி மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவு, செங்கல் மற்றும் அது தொடர்பான தொழில்களின் சில்லறை வேலைக்கான சேவை மீதான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளது.

விவசாய டிராக்டரின் சில பிரத்யேகமான பாகங்கள் மீதான வரி 28%லிருந்து 18%ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஷேவிங் க்ரீம், ஷாம்பு, சோப்பு உள்ளிட்ட அழகு சாதன பொருட்கள், சீவிங்கம், சோப்புப் பவுடர், மார்பிள், சாக்லேட் மீதான 28% வரி 18% ஆகக் குறைக்கப்படுகிறது. விளை பொருட்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 58 இனங்களில் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜிஎஸ்டி வரியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சிகரெட் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் 28 சதவீத வரியில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

166 பொருட்கள் மீது 28%லிருந்து 18% ஆகக் குறைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது, திரைப்படம் தொடர்பான சாதனங்கள், கடலை மிட்டாய், வெட் கிரைண்டர், பட்டாசு போன்றவற்றின் ஜிஎஸ்டியைக் குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com