
தில்லியில் 4 லட்சம் வாகனங்கள் பறிமுதல்?
By Raghavendran | Published on : 10th November 2017 04:41 PM | அ+அ அ- |

தில்லியில் சமீபகாலமாக காற்றில் ஏற்பட்டுள்ள மாசு அளவு பெருகி வருகிறது. இதனால் காற்றில் நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்குள்ள மக்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு மற்றும் இருதயக் கோளாறு ஏற்பட்டு வருகிறது.
தற்போது வழக்கத்துக்கும் மாறாக தில்லியில் கடும் பனிப்பொழிவும் ஏற்பட்டு வருவதால் இதன் விளைவு அதிகரித்து வருகிறது. எனவே காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் விதமாக தில்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தில்லியில் உள்ள 4 லட்சம் பழைய வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்ய மாநில போக்குவரத்து அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.
அக்டோபர் 17-ந் தேதி பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், 10 வருடங்களுக்கும் மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 வருடங்களுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் என மொத்தம் 4 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளன.
அதுமட்டுமல்லாமல் டீசல் வகை ஜெனரேட்டர்களின் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.