வெறும் 50 பொருட்களை மட்டும் 28% ஜிஎஸ்டியில் வைக்க முடிவு

ஆடம்பர மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் என 50 பொருட்களை மட்டும் 28% ஜிஎஸ்டி வரியில் வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வெறும் 50 பொருட்களை மட்டும் 28% ஜிஎஸ்டியில் வைக்க முடிவு


குவாஹாட்டி: ஆடம்பர மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் என 50 பொருட்களை மட்டும் 28% ஜிஎஸ்டி வரியில் வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-ஆவது கூட்டம் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்று வருகிறது.

ஜிஎஸ்டி வரி கடந்த ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, மாதம்தோறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி தொடர்பாகக் கூறப்படும் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில், வெறும் 50 பொருட்களுக்கு மட்டுமே அதிகபட்சமாக வசூலிக்கப்படும் 28% ஜிஎஸ்டியை நிர்ணயிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, கைகளால் தயாரிக்கப்படும் நாற்காலி, மேஜை உள்ளிட்ட மரச் சாமான்கள், மின்சார ஸ்விட்ச், பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள், கழிவறைக் கோப்பைகள், கார், பைக் சீட், அதற்கான கவர்கள், கழிவறையில் பயன்படுத்தப்படும் பிற உபகரணங்கள், ஷாம்பு உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள், எடை பார்க்கும் இயந்திரம், கம்ப்ரஸர் உள்ளிட்ட 227 பொருள்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இனி இவற்றில் பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதத்துக்கு கொண்டு வரப்படும்.

28% ஜிஎஸ்டியில் வரும் 227 பொருட்களில் 62 பொருட்களை மட்டுமே அதே வரிவிதிப்பில் வைத்திருக்க பரிந்துரை வைக்கப்பட்டது. ஆனால், அதில் மேலும் 12 பொருட்களுக்கும் வரி விதிப்பைக் குறைத்து ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஷேவிங் க்ரீம், ஷாம்பு, சோப்பு,  டியோட்ரண்ட், உள்ளிட்ட அழகு சாதன பொருட்கள், சீவிங்கம், சோப்புப் பவுடர், மார்பிள், கிரானைட், சாக்லேட் மீதான 28% வரி 18% ஆகக் குறைக்கப்படுகிறது.

சிகரெட் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் 28 சதவீத வரியில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு இன்று எடுக்கப்பட உள்ளது. அதாவது அதிகபட்சமான 28% ஜிஎஸ்டி என்பது இனி வெறும் 50 பொருட்களுக்கு மட்டுமே இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. மற்ற பொருட்கள் மீது 18% ஆகக் குறைக்கப்படுகிறது. தமிழக அரசின் பரிந்துரைகளை ஏற்று, 70 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பெயிண்ட், சிமெண்ட், துணி துவைக்கும் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி போன்றவை தொடர்ந்து 28% வரியிலேயே நீடிக்கும். 

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் பின்னணி: 

ஜிஎஸ்டி-யில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு விகிதங்களில் வரிகள் விதிக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி வரிவிகிதம் அமலாவதற்கு முன்பு குறு, சிறு தொழில் நிறுவனங்கள் 28 சதவீதத்துக்கும் குறைவான வரியைச் செலுத்தி வந்தன. 

ஆனால் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு பெரும்பாலான குறு, சிறு தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. 

இதையடுத்து, குறு, சிறு தொழில்களை அதிகம் கொண்ட பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர் சங்கத்தினர் அண்மையில் வருவாய்த் துறை அதிகாரிகளைச் சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர். எனவே, அவர்கள் தயாரிக்கும் பொருள்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

தொகுப்பு முறைத் திட்டத்தின்கீழ் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு சதவீதம் மட்டுமே வரி விதிக்க வேண்டும். குளிர்சாதன வசதி இல்லாத உணவகங்களுக்கு வரியைக் குறைக்க வேண்டும் என்று அஸ்ஸாம் நிதியமைச்சர் ஹேமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான மாநில நிதியமைச்சர்கள் குழு அளித்த பரிந்துரை ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏசி இல்லாத உணவகங்களில் இப்போது 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

மாநிலங்களுக்கு இடையே வர்த்தகம் செய்வோரையும் தொகுப்பு முறைத் திட்டத்தில் கொண்டுவரப் பரிசீலிக்கப்படும். 

வர்த்தகர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்தும் நடைமுறைகளில் சிக்கல் இருப்பதால் அது மேலும் எளிதாக்கப்படவுள்ளது. அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com