ஹிமாசல் பேரவைத் தேர்தல்: புதிய சாதனையாக 74% வாக்குப் பதிவு

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ராம்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை தனது மனைவி பிரதிபா சிங், மகன் விக்ரமாதித்யா சிங் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்று வாக்களித்த மாநில முதல்வர் வீரபத்ர சிங்.
ராம்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை தனது மனைவி பிரதிபா சிங், மகன் விக்ரமாதித்யா சிங் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்று வாக்களித்த மாநில முதல்வர் வீரபத்ர சிங்.

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்பு கடந்த 2012-ஆம் ஆண்டில் 73.5 சதவீத வாக்குகள் பதிவானதே அதிகபட்ச வாக்குப் பதிவாக இருந்தது.
68 தொகுதிகûளைக் கொண்ட ஹிமாசலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக வியாழக்கிழமை சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சியான காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
முதல்வர் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொண்டது. பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமல் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். 68 தொகுதிகளிலும் காங்கிரஸும், பாஜகவும் நேருக்கு நேர் மோதின. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 42 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 14, ஸ்வாபிமான் கட்சி, லோக் கட்பந்தன் கட்சி ஆகியவை தலா 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 
அமைதியாக நடந்தது: இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்த துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தேர்தல் குறித்துக் கூறியதாவது:
மாநிலத்தின் எந்த இடத்திலும் அசம்பாவிச் சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பொதுமக்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்வதற்கான ஒப்புகைச் சீட்டை அளிக்கும் 11,283 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அனைத்து 68 தொகுதிகளிலும் இந்த இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக மக்களிடம் இருந்து எவ்வித புகார்களும் எழவில்லை. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 297 இயந்திரங்கள் மாற்றப்பட்டன.
அதிகபட்ச வாக்குப்பதிவு: மொத்தம் 7,525 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 37,605 தேர்தல் பணியாளர்கள் களத்தில் இருந்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப் பதிவு குறித்து முழுத்தகவலும் கிடைத்த பிறகு இறுதியான வாக்குப் பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும். இதற்கு முன்பு 2012-ஆம் ஆண்டு 73.5 சதவீத வாக்குகள் பதிவானதுதான் ஹிமாசலப் பிரதேசத்தில் அதிகபட்ச வாக்குப் பதிவாக இருந்தது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஹிமாசலப் பிரதேசத்தில் 64.45 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாயின என்றார் அவர்.
டிசம்பர் 18-ல் முடிவு தெரியும்: மொத்தம் 337 வேட்பாளர்களில் களத்தில் உள்ளனர். இவர்களில் 62 பேர் இப்போது எம்எல்ஏவாக உள்ளனர். மாநிலத்தில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடைசி தேர்தல்- வீரபத்ர சிங்: ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், ராம்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மனைவி பிரதிபா சிங், மகன் விக்ரமாதித்யா சிங் உள்ளிட்டோருடன் சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரபத்ர சிங், 'பல தேர்தல்களைப் பார்த்துவிட்டேன். இதுதான் நான் போட்டியிடும் கடைசித் தேர்தல். காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும்' என்றார். வீரபத்ர சிங்குக்கு இப்போது 83 வயதாகிறது. பாஜக முதல்வர் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான பிரேம் குமார் துமல், தனது மகனும் எம்.பி.யுமான அனுராக் தாக்கூர் மற்றும் குடும்பத்தினருடன் ஹமீர்பூரில் வாக்களித்தார். 
மோடியின் கோரிக்கையை நிறைவேற்றிய மக்கள்!: முன்னதாக, ஹிமாசலப் பிரதேச தேர்தலில் சாதனை படைக்கும் அளவில் அதிக அளவில் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். அதனை அந்த மாநில மக்கள் நிறைவேற்றியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com