வாகன கட்டுப்பாடு திட்டம்: பசுமைத் தீர்ப்பாயம் கிடுக்கிப்பிடி

தில்லியில் வாகன கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ள நிலையில், அத்திட்டத்துக்கான அவசியத்தை ஆய்வுத் தகவல்களுடன் தெளிவுபடுத்த வேண்டும் எனவும்,
வாகன கட்டுப்பாடு திட்டம்: பசுமைத் தீர்ப்பாயம் கிடுக்கிப்பிடி

தில்லியில் வாகன கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ள நிலையில், அத்திட்டத்துக்கான அவசியத்தை ஆய்வுத் தகவல்களுடன் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், அதுவரை வாகன கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
 தில்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுவை கட்டுப்படுத்த, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு ஆணையம் (இபிசிஏ) தில்லி அரசுக்கும், மாநகராட்சிகளுக்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, நகரில் அடுத்த வாரம் 5 நாள்களுக்கு வாகன கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்துவதற்கு, தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
 ஒற்றைப்படை பதிவெண் கொண்ட வாகனங்கள் ஒரு நாளும், இரட்டைப் படை பதிவெண் கொண்ட வாகனங்கள் மறுநாளும் இயங்க அனுமதிக்கும் இத்திட்டமானது, தில்லியில் ஏற்கெனவே இரு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த தகவலில், "வாகனக் கட்டுப்பாடு திட்ட அமலாக்கத்தால், தில்லியில் காற்று மாசு குறையவில்லை' என்று குறிப்பிடப்பட்டது.
 இந்தச் சூழலில், தில்லியில் தற்போது நிலவி வரும் கடுமையான காற்று மாசுவை சமாளிக்கும் செயல்திட்டத்தின் அடிப்படையில், அடுத்த வாரம் 5 நாள்களுக்கு வாகன கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்படும் என்று தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, தீர்ப்பாயத் தலைவரும் நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு, தில்லி அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
 "தில்லியில் வாகன கட்டுப்பாடு திட்டம் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட நாள்களில், மற்ற நாள்களைவிட காற்று மாசு அதிகரித்து காணப்பட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியிருக்கும்போது, எந்த ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் வாகன கட்டுப்பாடு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தில்லி அரசு முடிவு செய்தது? அதற்கான நியாயமான காரணத்தையும், வாகன கட்டுப்பாடு திட்டத்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படவில்லை என்பதையும் தில்லி அரசு தெளிவுபடுத்த வேண்டும். அதுவரையில், வாகன கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட கூடாது.
 தில்லியில் காற்று மாசு கட்டுப்படுத்துவதற்கு, உச்ச நீதிமன்றமும், பசுமைத் தீர்ப்பாயமும் 100-க்கும் மேற்பட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ள போதிலும், வாகன கட்டுப்பாடு திட்டத்தை மட்டும் நீங்கள் (தில்லி அரசு) தேர்ந்தெடுப்பது ஏன்?
 வாகன கட்டுப்பாடு திட்டத்தை, "ஷாக் டிரீட்மென்ட்' போல அவசர கோலத்தில் செயல்படுத்தக் கூடாது. அப்படி செயல்படுத்தினால், எதிர்மறை விளைவுகளே ஏற்படும். கடந்த ஓராண்டில் காற்று மாசுவை குறைக்க தில்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று தீர்ப்பாயம் குற்றம்சாட்டியது.
 மேலும், வாகன கட்டுப்பாடு திட்ட அமலாக்க நாள்களில் கூடுதலாக 500 பேருந்துகளை இயக்கும் தில்லி அரசின் முடிவு தொடர்பாக கேள்வியெழுப்பிய தீர்ப்பாயம், அவற்றில் எத்தனை பேருந்துகள் டீசலில் இயங்குபவை என்பது குறித்த விவரத்தை அளிக்க உத்தரவிட்டது.
 இதனிடையே, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு ஆணையத்தின் உத்தரவின்படியே வாகன கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டதாக தில்லி அரசின் வழக்குரைஞர் தெரிவித்தார்.
 இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், "சுற்றுச்சூழல் மாசு தடுப்பு ஆணையம் பிறப்பித்த ஏராளமான உத்தரவுகளில் ஒன்றுதான் வாகன கட்டுப்பாடு திட்டம். அந்த உத்தரவுகளில் (தில்லி அரசு) 99 சதவீதத்தைவிட்டு, ஒரு சதவீதத்தை மட்டும் செயல்படுத்த முனைவது ஏன்? வாகன கட்டுப்பாடு திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. அதனை மேலும் திறனுடன், சிறப்பாக அமல்படுத்த வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்' என்று தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை, பசுமைத் தீர்ப்பாயத்தில் சனிக்கிழமையும் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com