‘பாகுபலி’ பாணியில் தந்தத்தை பிடித்து மேலே ஏற முயன்ற இளைஞரை தூக்கி வீசிய யானை! (வீடியோ)

சினிமாவில் வருவதைப் போல் முத்தம் கொடுக்க முயன்ற இளைஞரை யானை அந்த தும்பிக்கையால் தூக்கி வீசியதில் அவர் மரத்தில் மோதி சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார்.
‘பாகுபலி’ பாணியில் தந்தத்தை பிடித்து மேலே ஏற முயன்ற இளைஞரை தூக்கி வீசிய யானை! (வீடியோ)

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த யானைக்கு வாழைப்பழம் கொடுத்து அதன் தந்தத்தை பிடித்து சினிமாவில் வருவதைப் போல் முத்தம் கொடுக்க முயன்ற இளைஞரை அந்த யானை தும்பிக்கையால் தூக்கி வீசியதில் அவர் மரத்தில் மோதி சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். இந்தச் சம்பவம் முழுவதையும் அவருடன் இருந்த நண்பர் வீடியோ எடுக்க அது ஃபேஸ்புக்கில் நேரலையாகப் பதிவாகியுள்ளது.

பனை இலையைச் சாப்பிட்டு கொண்டிருக்கும் அந்த யானையிடம் அந்தப் பக்கமாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் நெருங்கி அதிலிருந்து வாழைப்பழத்தை எடுத்து ஊட்டுகிறார். உடனிருக்கும் நண்பர் “ஜாக்கிரதை” என்று சொல்லியவரே வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். சில வாழைப்பழங்களைக் கொடுத்த பிறகு அதன் தந்தத்தை பிடிக்க முயல்கிறார். வீடியோ எடுத்துக் கொண்டிருப்பவர் “நீ குடிச்சிருக்க, யானையைத் தொடாதே அதற்கு மதம் பிடித்து விடும்” என்று எச்சரிக்கிறார்.

அதை பொருட் படுத்தாமல் அந்த இளைஞர் பயந்தவாறே யானைக்கு முத்தம் கொடுக்கிறார், முதலில் அமைதியாக இருந்த யானை அவர் மறுபடியும் ஒருமுறை முத்தம் கொடுக்க முயலும் போது தும்பிக்கையில் 10 அடி தூரத்திற்கு தூக்கியடித்துள்ளது. அதில் எதிரில் இருந்த மரத்தில் மோதி கீழே விழுந்த இளைஞர் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் அதற்குள் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியுள்ளது. பாகுபலி, கும்கி போன்ற படங்களில் வருவதைப் போல் யானையிடம் இவர் விளையாட முயன்றுள்ளதைப் போல் தெரிகிறது. அடிப்பட்ட இளைஞரான ஜின்னு ஜான் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சுயநினைவிற்கு வந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com