தொல்பொருள் ஆய்வு, அருங்காட்சியக மேம்பாட்டுக்கு நிதியுதவி: மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை

தொல்பொருள்ஆய்வு, அருங்காட்சியக மேம்பாடு, கிராமிய கலைஞர் மேம்பாடு போன்ற திட்டங்களுக்கு மத்திய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி அளிக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது
தொல்பொருள் ஆய்வு, அருங்காட்சியக மேம்பாட்டுக்கு நிதியுதவி: மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை

தொல்பொருள்ஆய்வு, அருங்காட்சியக மேம்பாடு, கிராமிய கலைஞர் மேம்பாடு போன்ற திட்டங்களுக்கு மத்திய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி அளிக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவை தமிழக அரசின் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே பாண்டியராஜன் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு குறித்து அமைச்சர் கே. பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 91 வரலாற்றுச் சின்னங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டிலும், 411 வரலாற்றுச் சின்னங்கல் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன.
மொத்தமுள்ள 502 தொல்லியல் வரலாற்று சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசுக்கு அளித்துள்ளோம். இதில் தொல்லியல் ஆய்வுத் துறையும், தமிழக அரசும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளோம். இதனால், மனச்சநல்லூரில் உள்ள ஸ்வஸ்திக் கிணறு, மதுரையில் உள்ள சமணப் படுக்கைகள் உள்ளிட்டவை நன்கு காட்சிப்படுத்தப்படும். சுற்றுலாவும் மேம்படும்.
கலை, பண்பாடு: தமிழகத்தின் கலை, பண்பாட்டு மறுமலர்ச்சிக்காக யுனெஸ்கோ மிகப் பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது. இசைக் கலை, நடனக் கலை என்றாலே அது சென்னை என்ற அங்கீகாரத்தையும், முத்திரையையும் யுனெஸ்கோ அளித்துள்ளது. தாரகேஸ்வரத்தில் உள்ள சோழர் கால கோயில், தஞ்சைப் பெரிய கோயில், மாமல்லபுரம் உள்ளிட்டவற்றுக்கும் யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலும், மதுரை மாநகரமும் காத்திருப்புப் பட்டியலில் உள்ளது. யுனெஸ்கோ அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் இருக்கக் கூடிய கலைக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை மகிமைப்படுத்தி, அவர்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்கள் தேடிவரும் நோக்கில் திட்டத்தை வகுத்துள்ளோம்.
இத்திட்டத்துக்கும் மத்திய அரசின் ஆதரவைக் கேட்டுள்ளோம். இத்திட்டங்கள் தொடர்பாக எதிர்வரும் மத்திய நிதிநிலை அறிக்கையில் சேர்ப்பதற்கு அழுத்தம் அளித்துள்ளோம்.
தமிழக அரசின் தொல்லியில் துறை, அருங்காட்சியகங்கள் துறை, கலை, பண்பாட்டுத் துறை ஆகியவற்றுக்கு மத்திய அரசின் ஆதரவும், உதவியும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. ஆண்டுமுழுவதும் இத்துறைகளுக்கு வெறும் ரூ. 8 கோடிதான் பெறப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசு ரூ. 62 கோடி செலவிட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுபோன்ற திட்டங்களை முன்னெடுப்பதில் அதிக அளவு செலவிட வேண்டியுள்ளது. எனவே, திட்டங்களுக்கான நிதியில் கல்வித் துறையைப் போல பாதி அளவாவது மத்திய அரசு அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
கீழடி அகழாய்வு: கீழடி அகழாய்வு மழைக் காலத்துக்குப் பிறகு தொடங்கப்படும். இது தொடர்பாக அழகன்குடியில் உள்ள அதிகாரி சிவானந்தம் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திட்ட இயக்குநராக உள்ள பாஸ்கர் அகழாய்வை நடத்த உள்ளார். மத்திய தொல்லியல் துறை மூன்று அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
அகழாய்வில் 7,563 பொருள்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, முதல் கட்ட அறிக்கை வந்துள்ள நிலையில், மீதமுள்ள இரு கட்ட அறிக்கையை விரைந்து தயாரிக்கவும், பொதுவெளியில் வெளியிடவும் அழுத்தம் தந்து வருகிறோம். தமிழகத்தில் நடைபெற்ற 80 அகழாய்வுகள் குறித்து அறிக்கையை பொது வெளியில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான இணையதளம் இரு நாள்களில் வெளியிடப்படும் என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.
இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையர் (தமிழ்நாடு இல்லம்) என் .முருகானந்தம், தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்களுக்கான இயக்குநர் கவிதா ராமு ஆகியோர் உடனிருந்தனர்.



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com