கர்நாடகத்தில் 22,000 தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகம் முழுவதும் உள்ள 22,000 தனியார் மருத்துவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கர்நாடகத்தில் 22,000 தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனியார் மருத்துவர்கள் 22,000 பேர் வியாழக்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக மாநில தனியார் மருத்துர்கள் சங்கத் தலைவர் சி.ஜெயன்னா தெரிவித்ததாவது:

நாளை முதல் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள 600 தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த 22,000 மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கர்நாடக அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அனைத்து வெளிநோயளிகள் பிரிவுகளும் கூடச் செயல்படாது என்றார்.

பேரவையில் மாநில அரசு தாக்கல் செய்யவுள்ள தனியார் மருத்துவமனை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த நவ.2-ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டன.

எனினும், அரசு சட்ட மசோதாவைத் தாக்கல் செய்வதில் உறுதியாக உள்ளதால், நவ. 13-ஆம் தேதி முதல் மாநில அளவில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக அரசின் மருத்துவச் சட்டம் 2007-ன் படி சட்ட திருத்த மசோதா காரணமாக தனியார் மருத்துவமனைகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக மருத்துவ அறிக்கை, நோயாளிகளின் விவரங்கள், குறைந்தபட்ச மருத்துவ கட்டமைப்பு, மருத்துவச் சேவைகள் தொடர்பான ஆவணங்கள் இந்த கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.

ஆனால், இந்தப் புதிய சட்டத்தால் எவ்வித பலனும் இல்லை என சுகாதாரத்துறை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவர்களின் இந்தப் போராட்டத்தால் இதுவரை 6-க்கும் மேற்பட்டோர் மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் போராட்டத்தால் நிலைமை மோசமானால் அதற்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போனால் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com