இந்தியாவின் வளர்ச்சியில் புல்லட் ரயில் திட்டத்துக்கு முக்கிய பங்கு

இந்தியாவின் வளர்ச்சியில் புல்லட் ரயில் திட்டத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். மேலும், இத்திட்டத்தால் இந்திய ரயில்வே சர்வதேச
இந்தியாவின் வளர்ச்சியில் புல்லட் ரயில் திட்டத்துக்கு முக்கிய பங்கு

இந்தியாவின் வளர்ச்சியில் புல்லட் ரயில் திட்டத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். மேலும், இத்திட்டத்தால் இந்திய ரயில்வே சர்வதேச தளத்துக்கு உயரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை விமர்சித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. ஏற்கெனவே இருக்கும் ரயில்களையும், அதன் சேவைகளையும் மேம்படுத்துவதை விடுத்து, தற்போது புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்டிருப்பது பயனற்றது என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இதுதொடர்பாக 'குவோரா' என்ற கேள்விகளைப் பதிவிடும் இணையதளத்தில் அதிக அளவிலான மக்கள், புல்லட் ரயில் திட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பிருந்தனர். 'தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு புல்லட் ரயில் திட்டம் அவசியம்தானா?' என்று அதில் பெரும்பாலானோர் சார்பில் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தக் கேள்விக்கு, அந்த இணையதளத்திலேயே மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தமது பதிலை திங்கள்கிழமை பதிவிட்டார். அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேசமயத்தில், இந்த வேகத்துக்கு ஏற்ப வளர்ச்சி அடைய வேண்டிய அவசியமும் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நமது ரயில்வேயை மேம்படுத்துவது என்பது நாட்டின் வளர்ச்சியில் இன்றியமையாத ஒன்று. அந்த வகையிலேயே, புல்லட் ரயில் திட்டத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டமானது தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அதிகபட்ச பாதுகாப்பு, நேர சேமிப்பு, உயர்தர சேவை என்ற இலக்குடன் இந்தத் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் புல்லட் ரயில் திட்டத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 
இத்திட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், சர்வதேச தளத்துக்கு இணையாக இந்திய ரயில்வே உயரும் என்பதில் சந்தேகமில்லை.
உலக அளவில் பார்க்கும்போது, எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் சமூகத்தால் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது கிடையாது. பின்னர், அந்தத் தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்வியலுடன் பொருந்திச் சென்றுவிடும். இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். அதுபோல, புல்லட் ரயில் திட்டமும் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என அந்தப் பதிவில் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com