இந்தியாவும், அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள்: வெள்ளை மாளிகை

ஜனநாயகத்தைக் காக்கவும், பயங்கரவாதத்தை எதிர்க்கவும் உறுதிபூண்டுள்ள இந்தியாவும், அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள் என்று அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தைக் காக்கவும், பயங்கரவாதத்தை எதிர்க்கவும் உறுதிபூண்டுள்ள இந்தியாவும், அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள் என்று அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பின்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டுத் தலைநகர் மணிலாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சூழலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான வெள்ளை மாளிகை துணைச் செய்தித் தொடர்பாளர் ராஜ் ஷா வாஷிங்டனில் இந்தியச் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஜனநாயகத்தைப் பேணிக் காப்பதிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், இந்தியா அமைந்துள்ள பிராந்தியம் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அந்த வகையில், இந்தியாவும், அமெரிக்காவும் இயல்பிலேயே நட்பு நாடுகளாகும்.
அமெரிக்காவும், சீனாவுக்கும் இடையிலான ஒற்றுமைகளைவிட அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஒற்றுமைகள்தான் மிக அதிகம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுடன் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மிகவும் நெருக்கத்தை உணர்கிறது. மோடியின் செயல்பாடுகளால் அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகவும் கவரப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையே மணிலாவில் நடைபெற்ற சந்திப்பு இருதரப்பு உறவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். தற்போது இந்தியாவும், அமெரிக்காவும் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும், எரிசக்தி ஏற்றுமதி குறித்தும், உலக பயங்கரவாதம் மட்டுமன்றி மண்டலப் பாதுகாப்புப் பிரச்னைகள் குறித்தும் பேசத் தொடங்கியுள்ளனர்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக பிற நாடுகளுக்கு உதவியளிப்பது குறித்து கூற இந்தியாவும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், இரு நாட்டு நல்லுறவும் மிகச் சிறந்த முறையில் வலுப்பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, அதிபர் டிரம்ப் தலைமையில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மென்மேலும் வலுவடையும்.
அண்மையில் சீனா சென்றிருந்த அதிபர் டிரம்ப், அங்கு அமெரிக்காவின் நலனுக்காக பல கருத்துகளைச் சொல்லியிருந்தாலும், தெற்காசிய நாடுகளில், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைவிட இந்தியாவுக்கு அதிகம் தொடர்புடைய விவகாரங்கள் ஏராளமாக உள்ளன. அந்த விவகாரங்கள் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் மட்டுமே உரித்தானவையாக இருக்கும் என்றார் ராஜ் ஷா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com