கால்நடைத் தீவன ஊழல்: முன்னாள் தலைமைச் செயலர் குற்றவாளியாக அறிவிப்பு

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் சஜல் சக்ரவர்த்தியைக் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து நீதிமன்றக் காவலின் கீழ் அவர்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் சஜல் சக்ரவர்த்தியைக் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து நீதிமன்றக் காவலின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கான தண்டனை விவரங்கள் வரும் 21-ஆம் தேதி வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தின் ஆட்சிக் காலங்களின்போது கால்நடைத் தீவனங்கள் கொள்முதல் நடவடிக்கைகளில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்த முறைகேட்டில் தொடர்புடைய பிகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் விளைவாகவே லாலுவின் ஆட்சியும் கவிழ்ந்தது.
இந்த சூழலில், அப்போதைய பிகார் அரசில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி சஜல் சக்ரவர்த்திக்கும் கால்நடைத் தீவன முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது. பிகாரில் இருந்து ஜார்க்கண்ட் தனியாகப் பிரிக்கப்பட்ட பிறகு அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளராக சஜல் சக்ரவர்த்தி பொறுப்பு வகித்தார்.
இதற்கு நடுவே அவருக்கு எதிரான வழக்கு ஜார்க்கண்டில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அதன் தீர்ப்பு விவரங்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. அப்போது சஜல் சக்ரவர்த்தியை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.
அவருக்கு விதிக்கப்பட உள்ள தண்டனை விவரங்கள் வரும் 21-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தது. இதையடுத்து, நீதிமன்றக் காவலில் சஜல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com