தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகள் மேம்படுத்தப்படும்: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு உறுதி

தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் இயற்கைச் சூழலைப் பாதுகாத்து, அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச

தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் இயற்கைச் சூழலைப் பாதுகாத்து, அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச அரசு உறுதியளித்துள்ளது.
சுற்றுச்சூழல் விதிகளின்படியும், நீதிமன்ற வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் அதை நடைமுறைப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு ஈடுபட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், இத்தகைய உத்தரவாதங்கள் அந்த மாநிலத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச அரசு அண்மையில் வெளியிட்ட மாநில சுற்றுலாக் கையேட்டில் தாஜ்மஹால் பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை. இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. அதைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் சிலர் தாஜ்மஹாலுக்கு எதிராக வெளியிட்ட கருத்துகளும் புதிய சர்ச்சைகளுக்கு அடித்தளமிட்டன.
அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கருத்து தெரிவித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 'தாஜ்மஹால் தேசத்தின் அணிகலன்' என்று கூறினார். இதையடுத்து அந்தப் பிரச்னை சற்று ஓய்ந்தது.
இதனிடையே, தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் புறச் சூழலை பாதுகாப்பது தொடர்பான கொள்கைகளை வகுக்கக் கோரி இயற்கை ஆர்வலர் எம்.சி. மேத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், அந்த மனு, நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரப் பிரதேச அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்:
தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துவது என்பது ஆக்ரா-2021 தொலைநோக்குத் திட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். தாஜ்மஹாலின் சுற்றுவட்டார மண்டலம் 10,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ஆக்ரா, மதுரா, ஃபிரோஸாபாத், ஹத்ராஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அந்த வரம்புக்குள் வருகின்றன. அப்பகுதிகளின் புறச் சூழலை பாதுகாப்பதுடன் அவற்றை மேம்படுத்துவோம் என உறுதியும் அளிக்கிறோம் என்று உத்தரப் பிரதேச அரசு அந்த விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com