நீதிபதிகள் பெயரில் லஞ்சம்: எஸ்ஐடி விசாரணை கோரும் மனு தள்ளுபடி

நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம்
நீதிபதிகள் பெயரில் லஞ்சம்: எஸ்ஐடி விசாரணை கோரும் மனு தள்ளுபடி

நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் காமினி ஜெய்ஸ்வல் என்பவர், மூத்த வழக்குரைஞர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் மூலம் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால், அருண் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள், சாந்தி பூஷணும், பிரசாந்த் பூஷணும் ஆஜராகி, இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி கான்வில்கர் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று கோரினர். இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
எந்தவொரு காரணமும் இல்லாமல், நீதித்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டும் வழக்குரைஞர்கள் மனுக்களைத் தாக்கல் செய்வது கண்டனத்துக்குரியது. நீதித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல், வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி ஒருவரை, அதிலிருந்து தம்மை விடுவித்து கொள்ளுமாறு தெரிவிப்பது, வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஒப்பானது. இது நீதிமன்ற அவமதிப்புக்கு இணையானது.
இந்த மனு முழுவதும் ஊழல் தொடர்பான கருத்தே நிறைந்துள்ளது. அதேபோல், நீதித்துறைக்கும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 'மனுவை விசாரிக்கும் அமர்வில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இடம்பெறக் கூடாது; அந்த மனுவை நிர்வாக தரப்புக்கு அவர் அனுப்பவும் கூடாது' என்று மனுதாரர் தெரிவித்திருப்பது மிகப்பெரிய தவறாகும். இதையும் ஏற்க முடியாது. நீதித்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முயற்சியாகவே, இதைக் கருதுகிறோம். ஆகவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒடிஸா மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கு நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில், ஒடிஸா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்துசி மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com