பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி

பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக விசுவ ஹிந்து பரிஷத், அகில பாரதிய சத்ரிய மகா சபை ஆகிய அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக விசுவ ஹிந்து பரிஷத், அகில பாரதிய சத்ரிய மகா சபை ஆகிய அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்மாவதி. ராணி பத்மாவதியின் கதையைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 1-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, வரலாற்று உண்மைகளுக்குப் பொருந்தாத வகையில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பத்மாவதி திரைப்படத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விசுவ ஹிந்து பரிஷத், அகில பாரதிய சத்ரிய மகா சபை ஆகிய அமைப்புகள் போர்க் கொடி உயர்த்தியுள்ளன. இதுகுறித்து விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஆச்சார்யா தர்மேந்திரா, ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பத்மாவதி திரைப்பட முன்னோட்டத்தில், ராணி பத்மாவதியின் உண்மையான குணாதிசயங்களை சீரழிக்கும் விதமான காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பாக, அப்படத்தில் வரும் நடனக் காட்சியானது இந்திய கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும் முற்றிலும் எதிராக அமைந்துள்ளது. எனவே, இத்திரைப்பட இயக்குநர் பன்சாலிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார் ஆச்சார்யா தர்மேந்திரா.
இதுகுறித்து அகில பாரதீய சத்ரிய மகா சபை மகேந்திர சிங் ராத்தோர் கூறுகையில், 'பத்மாவதி திரைப்படத்தின் மூலம் வரலாற்றை அழிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்திரைப்படத்துக்கு தடைவிதிக்க வலியுறுத்தி வருகிற 19-ஆம் தேதியன்று தில்லியில் பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com