மாநிலங்களுக்கு இடையே தடைகளை குறைத்துள்ளது ஜிஎஸ்டி

மாநிலங்களுக்கு இடையே காணப்பட்ட தடைகளை, புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியின் மூலம் மத்திய அரசு குறைத்திருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு இடையே தடைகளை குறைத்துள்ளது ஜிஎஸ்டி

மாநிலங்களுக்கு இடையே காணப்பட்ட தடைகளை, புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியின் மூலம் மத்திய அரசு குறைத்திருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 37ஆவது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது, ஒரு முக்கிய மைல்கல்லாகும். அந்த வரியானது, மாநிலங்களுக்கு இடையேயான தடைகளை தகர்த்தெறிந்துள்ளது. பொதுவான சந்தை உருவாக்கப்படுவதற்கான உத்வேகத்தை ஜிஎஸ்டி அளித்துள்ளது. அதேபோல், முறையான பொருளாதார அமைப்பு, சக்திவாய்ந்த உற்பத்தித் துறை ஆகியவற்றுக்கும் ஜிஎஸ்டி உத்வேகம் அளிக்கிறது.
2013-14ஆம் ஆண்டில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 3,600 கோடி (36 பில்லியன்) டாலர்களாக இருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைகளின் காரணமாக, 2016-17ஆம் நிதியாண்டில் அன்னிய நேரடி முதலீடானது 6000 கோடி (60 பில்லியன்) அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
இந்திய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும், நாட்டில் இருந்து வறுமையை முழுவதும் ஒழிப்பதற்கான கொள்கைகளுக்கும், லட்சக்கணக்கான சாதாரண குடும்பங்களுக்கு வளர்ச்சியின் பயனைக் கொண்டு செல்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவை அனைத்தும், சாதாரண மக்கள் வர்த்தகத்தின் மூலம் பயனடைவதற்கே மேற்கொள்ளப்படுகிறது. ஏனெனில், அவர்கள்தான் நாட்டின் மிகப்பெரிய பங்குதாரர்கள் ஆவர்.
இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா), டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் தொடங்கிடுவோம் (ஸ்டார்ட் அப் இந்தியா), திறன்மிகு இந்தியா (ஸ்கில் இந்தியா), பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டிஸ்) போன்ற மத்திய அரசின் திட்டங்கள், அடித்தட்டு மக்களும் பொருளாதாரச் சீர்திருத்தங்களால் பயனடைய வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சிகள் ஆகும்.
தில்லியில் நடைபெறும் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், 222 வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநிலங்கள் பங்கெடுத்துள்ளன. இந்த ஆண்டுக்கான வர்த்தகக் கண்காட்சியின் கோஷம், 'ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா' ஆகும் என்றார் ராம்நாத் கோவிந்த்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com