ரூ.30 லட்சம் மதிப்புக்கு மேற்பட்ட சொத்துகள்: வருமான வரித் துறை ஆய்வு

ரூ.30 லட்சம் மதிப்புக்கு மேல் பதிவு செய்யப்பட்ட அனைத்து சொத்துகளையும், அதன் உரிமையாளர்களின் வருமான விவரங்களையும் ஆய்வு செய்து வருவதாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

ரூ.30 லட்சம் மதிப்புக்கு மேல் பதிவு செய்யப்பட்ட அனைத்து சொத்துகளையும், அதன் உரிமையாளர்களின் வருமான விவரங்களையும் ஆய்வு செய்து வருவதாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
பினாமி பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை அதிரடியாக வாபஸ் பெற்றது, போலி நிறுவனங்களை முடக்கியது என பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டமும் கொண்டுவரப்பட்டது.
பினாமி பெயரில் சொத்துகளை சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்தால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க அதில் வகை செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் தாண்டி கருப்புப் பணம் பதுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. அதைத் தடுக்கும் பொருட்டு சந்தேகத்துக்குரிய நபர்களின் இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் நிலவரப்படி ரூ.1,833 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளை வருமான வரித் துறையினர் கண்டறிந்து முடக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் காலகட்டத்தில் மொத்தமாக 621 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றில், அதிகபட்சமாக ஆமதாபாதில்136 சொத்துகளை வருமான வரித் துறையினர், தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். சென்னையைப் பொருத்தவரை பினாமி பெயர்களில் இருந்த 72 சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் அண்மையில் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அந்த வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா, அதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பினாமி பெயரில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் 24 சிறப்பு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பினாமி சொத்துக் குவிப்பைத் தடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அந்த நடவடிக்கையை மிகத் தீவிரமாக வருமான வரித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் குறிப்பாக, ரூ.30 லட்சம் மதிப்புக்கு மேல் பதிவு செய்யப்பட்ட சொத்துகளையும், அதன் உரிமையாளர்களின் வருமான விவரங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். முறைகேடாக பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்பிலான சொத்துகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com