கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றினார் நிதீஷ் குமார்

ஐக்கிய ஜனதாதளக் கட்சி மற்றும் அதன் சின்னத்தை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை கைப்பற்றினார்.
கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றினார் நிதீஷ் குமார்

பீகாரில் நடைபெற்று வந்த ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் உரிமை கோரும் சர்ச்சை வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. எனவே அக்கட்சி மற்றும் அதன் சின்னம் ஆகியவற்றை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தரப்புக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.

முன்னதாக, பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்டவை மெகா கூட்டணி அமைத்து வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

எனவே அம்மாநில முதல்வராக நிதீஷ் குமார் மீண்டும் பதவியேற்றார். துணை முதல்வராக லாலு மகன் தேஜஸ்வி பொறுப்பேற்றார். அதிக தொகுதிகள் பெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சிக்கு அமைச்சரவையில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், துணை முதல்வர் தேஜஸ்வி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்தது. மேலும் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. எனவே அவரை துணை முதல்வர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் அதிரடியாக நீக்கினார்.

இதையடுத்து இவ்விரு கட்சிகளுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது. நிதீஷ் குமார் திடீரென பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்க வைத்தார். இதனால் சொந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரான சரத் யாதவுக்கும் நிதீஷுக்கும் இடையே பனிப்போர் துவங்கியது.

இதனால் அக்கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து செயல்படத் துவங்கியது. இதன்பின்னர் ஆகஸ்ட் 25-ந் தேதி கட்சி மற்றும் சின்னத்தை தனக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார். ஆகஸ்ட் 27-ந் தேதி மிகப்பெரிய கூட்டத்தை நடத்திய ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் நடத்தினார். பின்னர் செப்டம்பர் 17-ந் தேதி தில்லியில் சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடத்தி நிதீஷ் குமாரை நீக்குவதாகவும், இதுவே உண்மையான கட்சி என்று பிரகடனம் செய்தார்.

இந்நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் அமைச்சர் ராஜீவ் ரன்ஜன், ராஜ்யசபா உறுப்பினர் ஆர்.சி.பி.சிங், கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய், தேசிய செயலாளர் கே.சி.தியாகி உள்ளிட்டோர் தங்கள் தரப்பில் 71 எம்எல்ஏ-க்கள், 30 எம்எல்சி-க்கள், 9 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோரது ஆதரவு அடங்கிய கடிதத்துடன் தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் உரிமை கோருவது தொடர்பாக மனு அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக சரத் யாதவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நீக்குமாறு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்து கோரிக்கை வைத்தனர். மேலும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் நிதீஷ் குமார் அறிவித்தார்.

இச்சம்பவங்களை அடுத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி மற்றும் அதன் சின்னமான அம்பு ஆகியன நிதீஷ் குமார் தரப்புக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com