'கசாப் ஜெயந்தி' கொண்டாடுவார் கர்நாடக முதல்வர் சித்தராமையா: மத்திய இணை அமைச்சர் அனந்த் குமார் விளாசல்

கூடிய விரைவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கசாப் ஜெயந்தி கூட கொண்டாடுவார் என்று மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.
'கசாப் ஜெயந்தி' கொண்டாடுவார் கர்நாடக முதல்வர் சித்தராமையா: மத்திய இணை அமைச்சர் அனந்த் குமார் விளாசல்

சமீபத்தில் கர்நாடக அரசு சார்பில் திப்பு சுல்தான் ஜெயந்தி அம்மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா கூடிய விரைவில் கசாப் ஜெயந்தி கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று மத்திய திறன் மேம்பாட்டுக்கான இணையமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கர்நாடகத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், இதே மாநிலத்தின் கிட்டூர் பேரரசில் பிறந்த மகாராணி சென்னம்மாவை மறந்து விட்டனர். அவருக்கு எந்த விழாவும் எடுக்கவில்லை.

கிட்டூர் சென்னம்மா கடந்த 1824-ம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முறையாக ஆயுதப் போரில் ஈடுபட்டவர். இதற்காக அவர்களால் கைது செய்யப்பட்டார். அதுவே பின்னாளில் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு முன்மாதிரியாக அமைந்தது. 

ஏனெனில் சித்தராமையாவுக்கு முஸ்லிம்கள் ஓட்டு அவசியம் தேவை என்பதால் இக்காரியத்தைச் செய்தார். அடுத்து 2008-ம் ஆண்டு மும்பை தாஜ் ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 164 பேர் இறப்புக்கும், 308 பேரின் படுகாயங்களுக்கும் காரணமாக இருந்த அஜ்மல் கசாப்பை கௌரவிக்கும் விதமாக கசாப் ஜெயந்தி கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்காக சித்தராமையா எந்த நிலைக்கும் போகத் தயங்க மாட்டார். இதற்காக வாக்காளர்களின் காலிலும் விழுவார். இங்கு நடைபெறும் காங்கிரஸ் அரசாங்கம் வங்கதேச அகதிகளுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

அவர்கள் பெல்காம், பிஜபூர், ஹூப்ளி, தாராவாட், கிட்டூர் என அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக உள்ளனர். பெங்களூருவில் மட்டும் 9 லட்சம் வங்கதேச அகதிகள் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது.

நம்முடைய ஒவ்வொரு அடியும் பார்த்து தான் வைக்க வேண்டும். நமது காலின் கீழ் வெடிகுண்டு இருக்கும் அபாயம் உள்ளது என்றார்.

முன்னதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, நாடு முழுவதும் சட்டவிரோதமாக 2 கோடி வங்கதேச அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதாக கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com