ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2ஆவது அரசு போல மோடி அரசின் மீது ஊழல் முத்திரை விழ வாய்ப்பு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2-ஆவது அரசைப் போன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2ஆவது அரசு போல மோடி அரசின் மீது ஊழல் முத்திரை விழ வாய்ப்பு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2-ஆவது அரசைப் போன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீதும் ஊழல் முத்திரை விழ வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
 மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2ஆவது அரசுதான் கடைசியாக தனது ஆட்சிக்காலம் முழுவதையும் நிறைவு செய்தது. அந்த அரசு மீது மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டு விட்டது.
 எந்த அரசானாலும் 5 ஆண்டுகாலத்தை நிறைவு செய்தாலே, மக்களுக்கு அதன்மீது கசப்புணர்வு ஏற்பட்டு விடுகிறது. அதுபோல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2ஆவது அரசுக்கு எதிராக நடந்தது. பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு தனது ஆட்சிக்காலம் முழுவதையும் நிறைவு செய்யும்போது இவ்வாறே நடக்க வாய்ப்புள்ளது. இது எனது ஆசையில்லை. ஆனால் அப்படி நடக்கவே வாய்ப்புள்ளது.
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2ஆவது அரசின் ஆட்சிக்காலம் நிறைவடையும்போது, இத்தகைய ஊழல் முத்திரை விழும் என்பதை நான் அறிந்திருந்தேன். நான் நினைத்ததுபோல், அந்த அரசுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபரை குற்றவாளி என்று, அவருக்கு தண்டனை அளிக்கப்படும் வரை நான் ஏற்க மாட்டேன்.
 தற்போது குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபருக்கு தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படாமலே, அவரை குற்றவாளி என்று முடிவு செய்துவிடுவது நடக்கிறது. இது மிகவும் தவறானதாகும். இத்தகைய நிலை, நமது நாட்டின் சட்டத்தையே அழித்து விடும்.
 அரசியல் கட்சியோ அல்லது அரசியல்வாதியோ அவர்களுக்கு தேர்தல்களுக்கு நிதி தேவைப்படுகிறது. இதுவே ஊழலுக்கு வழிவகுக்கிறது. தேர்தல் நிதி கிடைப்பதற்கான வழி கண்டறியப்படாத வரையிலும், நாட்டில் ஊழலைக் குறைக்க முடியாது. பணமதிப்பிழப்பு முடிவானது, மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் கள்ள ரூபாய் நோட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. பணமதிப்பிழப்பு முடிவு எங்கு தோல்வியை சந்தித்தது என்று அறிய விரும்புகிறீர்களா? ஊழலை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் நினைக்கிறீர்களா? அப்படியெனில், தேர்தல் நடைபெறவிருக்கும் குஜராத் மாநிலத்துக்கு சென்று 20 நாள்கள் தங்கியிருங்கள். அப்போது எந்த மாதிரியான பணம் அங்கு புழக்கத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
 பணமதிப்பிழப்பு முடிவு, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த உதவியுள்ளது என்ற அரசின் கருத்தை மறுக்கிறேன். கடந்த 10ஆம் தேதி நிலவரப்படி, எல்லையில் நடைபெற்ற ஊடுருவல் முயற்சிகள், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை, பலியான அப்பாவி மக்கள் எண்ணிக்கை, வீரர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நிகழாண்டில் மிகவும் அதிகம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
 மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 100ஆவது பிறந்த தினத்தை நமது நாடும், அரசும் கொண்டாடாமல் இருப்பது வெட்கக் கேடானது. சில துறைகளில் அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். சிலவற்றில் அவர் வெற்றி பெறவில்லை. அவரும் தவறிழைத்துள்ளார். பிற்காலத்தில் அவர், நெருக்கடி நிலையைத் தவறு என்று ஒப்புக் கொண்டதுடன், மீண்டும் அந்தத் தவறை இழைக்க மாட்டேன் என்றும் கூறினார் என ப. சிதம்பரம் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com