கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியல்: இந்திய அரசுடன் பரிமாறிக் கொள்ள ஸ்விஸ் நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்களை

ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்துக்கு ஸ்விஸ் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
 கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ஸ்விஸ் அரசுக்கும், இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 இந்த ஒப்பந்தத்துக்கு ஸ்விஸ் நாடாளுமன்றத்தின் கீழவை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், ஸ்விஸ் நாடாளுமன்ற மேலவையின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் வரி விதிப்புக் குழு, இந்த ஒப்பந்தம் குறித்து சனிக்கிழமை விவாதித்துள்ளது. அப்போது, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இந்தக் குழு ஒப்புதல் அளித்தது.
 மேலும், இந்த ஒப்பந்தத்தில் தனி நபர் சட்டப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான திருத்தத்தை நாடாளுமன்றத்தில் ஸ்விஸ் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.
 அந்த ஒப்பந்தம், வரும் 27-ஆம் தேதி தொடங்கும் ஸ்விஸ் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது, மேலவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலவை ஒப்புதல் அளித்த பிறகு, அடுத்த ஆண்டு முதல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். அதையடுத்து, இந்தியா- ஸ்விட்சர்லாந்து இடையே முதல் கட்ட விவரங்கள், வரும் 2019-ஆம் ஆண்டு பகிர்ந்து கொள்ளப்படும்.
 அதன்படி, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர், அவர்களின் வங்கிக் கணக்கு எண்கள், முகவரி, பிறந்த தேதி, வங்கியில் உள்ள தொகை ஆகியவை பற்றிய விவரங்களை இந்திய அரசுக்கு ஸ்விஸ் அரசு அனுப்பி வைக்கும்.
 உதாரணமாக, ஸ்விஸ் வங்கியில் இந்தியர் ஒருவர் வங்கிக் கணக்கு தொடங்கினால், அந்த வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களை ஸ்விஸ் அரசுக்கு வங்கி நிர்வாகம் அனுப்பி வைக்கும். அதையடுத்து, அந்த விவரங்களை இந்திய அரசுக்கு ஸ்விஸ் அரசு அனுப்பி வைக்கும். அந்த விவரங்களைக் கொண்டு இந்திய அரசு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
 கருப்புப் பணத்தை ஒழிக்கவும், எல்லை தாண்டிய வரி ஏய்ப்பைத் தடுக்கவும், இந்தியா, ஸ்விட்சர்லாந்து உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுதிபூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com