காங்கிரஸ் கட்சித் தலைவராகிறார் ராகுல்: தில்லி காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்! 

காங்கிரஸ் கட்சித் தலைவராகிறார் ராகுல்: தில்லி காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்! 

காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியினை தேர்வு செய்வது என தில்லியில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுதில்லி: காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியினை தேர்வு செய்வது என தில்லியில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், தில்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகள் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும். அந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கு வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி கடைசி நாளாகும். தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தியைத் தவிர கட்சியின் மூத்த தலைவர்கள் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும்.

அப்போது தேர்தலில் பங்கேற்கும் காங்கிரஸ் கட்சியின் எலெக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் 2,000 பேர் பங்கேற்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்வர். அதில் வெற்றி பெறுபவர், காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்படுவார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தியைத் தவிர, வேறு யாரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லையெனில், கட்சியின் தலைவராக ராகுல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படும்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி, கட்சியின் நிறுவன நாளான டிசம்பர் 28-ஆம் தேதி பதவியேற்க வேண்டும் என்று காரிய கமிட்டியில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும்  காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com