காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்: குஜராத் தேர்தலுக்கு முன்பு பொறுப்பேற்க வாய்ப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க இருக்கிறார். குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு, அவர் இந்தப் பொறுப்பை ஏற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்: குஜராத் தேர்தலுக்கு முன்பு பொறுப்பேற்க வாய்ப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க இருக்கிறார். குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு, அவர் இந்தப் பொறுப்பை ஏற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், தில்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் திங்கள்கிழமை (நவ.20) காலை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது.
 இதையடுத்து, கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும். அந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கு வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி கடைசி நாளாகும். தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தியைத் தவிர கட்சியின் மூத்த தலைவர்கள் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும்.
 அப்போது தேர்தலில் பங்கேற்கும் காங்கிரஸ் கட்சியின் எலெக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் 2,000 பேர் பங்கேற்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்வர். அதில் வெற்றி பெறுபவர், காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்படுவார்.
 காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தியைத் தவிர, வேறு யாரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லையெனில், கட்சியின் தலைவராக ராகுல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படும்.
 இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜனார்த்தன் துவிவேதி கூறுகையில், "காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேதி திங்கள்கிழமை இறுதி செய்யப்படும்; ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தால், மனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளில், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டது குறித்து அறிவிக்கப்படும்' என்றார்.
 கடந்த 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டார். அதன்பிறகு, கட்சித் தலைவர் பதவிக்கு இதுவரையிலும் போட்டி நிலவவில்லை. சோனியா காந்தியே ஒருமனதாக காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு வந்தார்.
 பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சித் தலைவராக விருப்பம் தெரிவித்த ராகுல்
 காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க விரும்புவதாக ராகுல் காந்தி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது, கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்களுடன் கடந்த செப்டம்பர் மாதம் ராகுல் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், "கட்சித் தலைவராகப் பணியாற்ற நான் தயாராக உள்ளேன்; ஆனால் இதற்கு கட்சியில் அமைப்பு ரீதியிலான தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அந்த நடவடிக்கை தற்போது நடந்து கொண்டிருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.
 ஹிமாசலப் பிரதேசம், தேர்தலை எதிர்கொள்ளும் குஜராத், கர்நாடகம், திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் தவிர, எஞ்சிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியிலான தேர்தல்கள் நடந்து முடித்து விட்டன.
 அதேபோல், பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
19 ஆண்டுகளாக தலைவர் பதவியில் சோனியா
 காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி 19 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். அதாவது, கடந்த 1998-ஆம் ஆண்டு சீதாராம் கேசரிக்குப் பிறகு, அந்தப் பதவிக்கு வந்த சோனியா காந்தி தொடர்ந்து 19 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்து சாதனை படைத்துள்ளார். இதேபோல், ராகுல் காந்தியும் காங்கிரஸ் துணைத் தலைவராக 4 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வருகிறார். இந்தச் சூழ்நிலையில், சோனியா காந்தி கடந்த மாதம் பேசியபோது, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்க இருக்கும் தகவலை வெளியிட்டார்.
 இதையடுத்து, கடந்த 7-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
 அப்போதும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி, கட்சியின் நிறுவன நாளான டிசம்பர் 28-ஆம் தேதி பதவியேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com