சபரிமலை வரும் ஐயப்பப் பக்தர்களுக்கு தேவசம்போர்டு வைக்கும் கோரிக்கைகள்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, மாலை அணிந்து வரும் பக்தர்கள் அனைவருக்கும், கோயில் தேவசம்போர்டு சில கோரிக்கைகளை வைத்துள்ளது.
சபரிமலை வரும் ஐயப்பப் பக்தர்களுக்கு தேவசம்போர்டு வைக்கும் கோரிக்கைகள்!


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, மாலை அணிந்து வரும் பக்தர்கள் அனைவருக்கும், கோயில் தேவசம்போர்டு சில கோரிக்கைகளை வைத்துள்ளது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை என்னவென்றால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து வரும் பக்தர்கள், பம்பை நதியில் குளிக்கும் போது, தங்களது ஆடைகளை நதியிலேயே விட்டுவிடும் பழக்கத்தை மேற்கொள்கின்றனர். ஆனால், இது பாரம்பரியமாக வந்த வழக்கம் அல்ல என்றும், சமீப காலத்தில் உண்டான தவறான  பழக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

பம்பை நதியில் தங்களது ஆடைகளையோ அல்லது மாலைகளையோ கழற்றி வீசும் பழக்கம் சுகாதார சீர்கேட்டையே உருவாக்குவதாகவும், இது பம்பை நதியின் சூழலைக்கும் குலைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, பம்பை நதியை தூய்மையாக வைத்திருப்பது என்ற நோக்கத்தை நிறைவேற்ற, பக்தர்கள் இனி இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் குடிநீர் கேன் மற்றும் பிளாஸ்டிக் பைகளை வனப்பகுதிகளில் வீசுவதால், வனப்பகுதி மோசமடைவதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களிடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. எனவே பிளாஸ்டிக் கொண்டு வருவதையும், பயன்படுத்துவதையும் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சபரிமலை கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்ணிடம் விசாரணை

சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் ஞாயிற்றுக்கிழமை 31 வயது பெண் ஒருவர் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 தெலங்கானா மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண், சபரிமலை கோயில் வளாகத்தில் பிடிபட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோயிலுக்கு பக்தர்கள் இருமுடி எடுத்து வருவது வழக்கம். ஆனால், அப்பெண் இருமுடி எடுத்து வரவில்லை. அதேபோல், பக்தர்கள் 18 படி வழியாகவே சன்னிதானத்தை அடைவார்கள். ஆனால் அப்பெண் மாற்று வழி ஒன்றின் மூலம் சன்னிதானத்துக்குள் நுழைய முயன்றார். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரைப் பிடித்தனர்.

தனது கணவர், இரு குழந்தைகள் மற்றும் 11 பேர் அடங்கிய தனது கிராமத்தைச் சேர்ந்த குழுவினருடன் அவர் சபரிமலைக்கு வந்துள்ளார். பெண்கள் சன்னிதானத்துக்குள் நுழையக் கூடாது என்ற விதி தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

 அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அடையாள அட்டையில் 31 வயது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெண்கள் நுழையாமல் இருக்க பம்பை பகுதியிலேயே போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். ஆனால், மேற்கண்ட பெண் எப்படி சன்னிதானம் பகுதிக்கு வந்தார் என்பது தெரியவில்லை.

 சபரிமலையில் மண்டலம்-மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 15-ஆம் தேதிதான் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் இக்காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

 சபரிமலையில் பெண்களுக்குத் தடை விதிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு உள்ளது. இந்த வழக்கு கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com