பனாமா விவகாரம்: புதிய கருப்புப் பண தடுப்புச் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை

பனாமா ரகசிய ஆவணங்களில் இடம்பெற்றுள்ள 7 இந்திய நிறுவனத்துக்கு எதிராக, புதிய கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்படி, குற்றவியல் நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியுள்ளது.

பனாமா ரகசிய ஆவணங்களில் இடம்பெற்றுள்ள 7 இந்திய நிறுவனத்துக்கு எதிராக, புதிய கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்படி, குற்றவியல் நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியுள்ளது.
 வெளிநாடுகளில் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் மற்றும் சொத்துகளை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை சர்வதேசப் புலனாய்வு பத்திரிகையாளர்கள் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது. பனாமாவைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அந்தப் பட்டியலை பத்திரிகையாளர் அமைப்பு கசிய விட்டுள்ளது.
 அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் கருப்புப் பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்துகளைப் பதுக்கி வைத்திருப்பதை வருமான வரித் துறை கண்டறிந்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு எதிராக, 2015-ஆம் ஆண்டைய புதிய கருப்புப் பணத் தடுப்பு (கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துகள்) மற்றும் வரி விதிப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
 இதுதொடர்பாக, வருமான வரித் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 அந்த 7 நிறுவனங்களும் தங்களது வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள் பற்றிய விவரங்களை இந்திய வருமான வரித் துறையிடம் இதற்கு முன்பு தெரிவிக்கவில்லை. எனவே, அந்த 7 நிறுவனங்களின் சொத்துகளை மறுமதிப்பீடு செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 புதிய கருப்புப் பணத் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அந்தச் சட்டப்படி முதன்முறையாக 7 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை, வரி ஏய்ப்பு புகார்களுக்கு 1961-ஆம் ஆண்டைய வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
 அந்தச் சட்டத்தின்படி, கணக்கில் காட்டப்படாத சொத்துகளுக்கு 120 சதவீதம் வரியும், அபராதமும் விதிக்கப்படும். இதுதவிர, வரி ஏய்ப்பு செய்தவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், அந்த 7 நிறுவனங்கள் மீது அன்னியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று அந்த வருமான வரி அதிகாரி கூறினார்.
 பட்டியலில் யார்? யார்?: எனினும், சர்வதேச நாடுகளிடையே மேற்கொண்டுள்ள ரகசியக் காப்பு ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்பதால், அந்த 7 நிறுவனங்களின் பெயர்களை வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com