பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் அளித்ததால் காஷ்மீரில் வெற்றி கிடைத்து வருகிறது

"ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு முழுச் சுதந்திரம் கொடுத்துள்ளதால்தான் அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக வெற்றிகள் கிடைத்து வருகிறது' என
பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் அளித்ததால் காஷ்மீரில் வெற்றி கிடைத்து வருகிறது

"ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு முழுச் சுதந்திரம் கொடுத்துள்ளதால்தான் அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக வெற்றிகள் கிடைத்து வருகிறது' என பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து ஜம்முவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜகியுர் ரஹ்மான் லக்வியின் உறவினர் உள்பட 6 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது, காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடைப்பிடித்து வரும் தீர்க்கமான கொள்கையின் விளைவாகக் கிடைத்த வெற்றியாகும்.
 பாதுகாப்புப் படையினர் தங்களது கடமைகளை பணிநேர்த்தியுடன் நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு மத்திய அரசு முழுமையாக சுதந்திரம் அளித்துள்ளது. அதன் காரணமாகத்தான் பாதுகாப்புப் படையினரால் வெற்றி மீது வெற்றி பெற முடிகிறது. அநேகமாக, காஷ்மீர் பயங்கரவாதம் தனது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்றே சொல்லலாம்.
 தற்போதெல்லாம் காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் தளபதிகளாகப் பொறுப்பேற்கும் ஒவ்வொருவரது வாழ்நாளும் 10-லிருந்து 15 வாரங்களுக்குள் முடிவடைந்து விடுகிறது. ஒரு தளபதியை நியமிக்கும்போதே அடுத்த தளபதியை தயார் நிலையில் வைத்துக் கொள்ளும் நிலைமைக்கு பயங்கரவாத அமைப்புகள் தள்ளப்பட்டுள்ளன. முன்பெல்லாம் இந்தத் தளபதிகள் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்து வந்தார்கள்.
 கடந்த 25 ஆண்டுகளில் தற்போதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் காஷ்மீர் பிரச்னை குறித்து ஒரு தெளிவான, உறுதியான, நிலையான கொள்கை உருவாகியுள்ளது. அந்தக் கொள்கையின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடுவது கிடையாது. மிரட்டலோ, தலையீடோ இல்லாமல் தகுந்த வாய்ப்பு கொடுத்தால், தங்களால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்பதை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தற்போது நிரூபித்து வருகின்றனர். காஷ்மீரில் பயங்கரவாதம் குறித்த அச்சம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது. அதன் காரணமாகத்தான், பயங்கரவாத அமைப்பில் இணைந்த கல்லூரி மாணவர் மஜித் அர்ஷித், அதிலிருந்து விலகி போலீஸாரிடம் சரணடைந்துள்ளார். அவரைப் போன்று பல இளைஞர்களும் பயங்கரவாதப் பாதையிலிருந்து விலகி, பிரதமர் நரேந்திர மோடி காட்டிய வளர்ச்சிப் பாதையில் இணைந்து வருகின்றனர்.
 இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தூண்டி வருவது எப்போதுமே தெரிந்த விஷயம்தான். பாகிஸ்தான்தான் அந்த உண்மையை பிடிவாதமாக மறுத்து வந்தது. எனினும், கடந்த சில மாதங்களாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடுதான் சரியானது என்பதை அனைவரும் உணர்ந்து வருகின்றனர். அதன் காரணமாக, அந்த விவகாரத்தில் தொடர்ந்து மறுப்பு நிலையைக் கடைப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது என்றார் ஜிதேந்திர சிங்.
"ஐ.எஸ். பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து கவனம்'
 காஷ்மீரில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பொறுப்பேற்றிருப்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
 காஷ்மீரில் போலீஸார் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு முதல் முறையாக ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில், காரில் வந்த 3 பயங்கரவாதிகள் போலீஸாரை நோக்கி சரமாரியாகச் சுட்டதில் ஒரு காவல்துறை துணை ஆய்வாளர் உயிரிழந்தார். ஒரு சிறப்புப் படை அதிகாரி காயமடைந்தார்.
 அந்தத் தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்தியதாக அந்த அமைப்பின் ஆதரவு செய்தி நிறுவனமான "அமாக்' தெரிவித்தது. தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பதில் நடவடிக்கையில் உள்ளூர் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இறுதிச் சடங்கின்போது, அந்த பயங்கரவாதியின் உடலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொடி சுற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com