ஹரிவராசனம் பாடலில் உள்ள குறை என்ன? இதுபற்றி ஜேசுதாஸ் என்ன சொல்கிறார்?

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஒலிக்கப்படும் 'ஹரிவராசனம்' பாடலில் குறைகள் இருப்பதால், அந்தப் பாடலுக்குப் பதிலாக திருத்தங்களுடன் கூடிய புதிய பாடலைப் பதிவு செய்து பயன்படுத்த அந்தக் கோயில் நி
ஹரிவராசனம் பாடலில் உள்ள குறை என்ன? இதுபற்றி ஜேசுதாஸ் என்ன சொல்கிறார்?

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஒலிக்கப்படும் 'ஹரிவராசனம்' பாடலில் குறைகள் இருப்பதால், அந்தப் பாடலுக்குப் பதிலாக திருத்தங்களுடன் கூடிய புதிய பாடலைப் பதிவு செய்து பயன்படுத்த அந்தக் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், திரைப்படப் பாடகருமான ஜேசுதாஸ் பாடியுள்ள 'ஹரிவராசனம்' பாடல், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மூலவருக்கான தாலாட்டுப் பாடலாக ஒலிக்கப்பட்டு வருகிறது.

 1975-ஆம் ஆண்டு வெளியான 'சுவாமி ஐயப்பன்' திரைப்படத்துக்காக, மறைந்த ஜி.தேவராஜனால் இசையமைக்கப்பட்டு ஜேசுதாஸால் பாடப்பட்ட அந்தப் பாடல் மிகவும் புகழ் பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பாடல் சபரிமலை கோயிலில் வழக்கமாக ஒலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1920-ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த பக்திப் பாடலை ஏராளமானோர் பாடி வெளிவந்திருந்தாலும், ஜேசுதாஸ் பாடிய பாடலே மிகவும் புகழ் பெற்றதாக உள்ளது.

 இந்த நிலையில், திரையிசைக்காக 'ஹரிவராசனம்' மூலப் பாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாலும், பாடலில் தவறான உச்சரிப்பு இருப்பதாலும் ஜேசுதாஸ் பாடியுள்ள அந்தப் பாடலை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக, மூலப் பாடலை முழுமையாகக் கொண்டுள்ள புதிய பாடலைப் பதிவு செய்து பயன்படுத்த சரிமலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ஏ.பத்மகுமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ஹரிவராசனம்' பாடலில், இசையின் நேர்த்திக்காக மூலப் பாடலில் எழுதப்பட்டிருந்த 'சுவாமி' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பாடலில் வரும் 'அரி' மற்றும் 'விமர்தனம்' ஆகிய இரு வார்த்தைகள் தவறான முறையில் ஒன்றாகச் சேர்த்து உச்சரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

'எதிரி' என்னும் பொருள் கொண்ட 'அரி' என்ற வார்த்தையையும், 'அழித்தல்' என்னும் பொருள் கொண்ட 'விமர்தனம்' என்னும் வார்த்தையையும் தனித் தனியாகத்தான் உச்சரிக்க வேண்டும் என்றும் பாடகர் ஜேசுதாஸே ஒப்புக் கொண்டுள்ளார்.

 இந்த நிலையில், குறைகள் களையப்பட்ட புதிய வடிவில் 'ஹரிவராசனம்' பாடலைப் பதிவு செய்து, அதை இனி சபரிமலைக் கோயிலில் ஒலிக்கச் செய்ய முடிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தம் வாரியத் தலைவர் ஏ.பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
 
'ஹரிவராசனம்' பாடலைப் பாடியுள்ள பாடகர் ஜேசுதாஸ், சபரிமலை ஐயப்பனின் அதிதீவிர பக்தர் ஆவார். மேலும், அவர் அந்தக் கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருகிறார்.

ஹரிவராசனம் பாடலை எழுதியது யார்?

முன்னதாக இந்த பாடலை 1950களில் கும்பகுடி குளத்தூர் ஐயர் எழுதியதாகக் கூறப்பட்டது. ஆனால், 1920ம் ஆண்டிலேயே ஜானகி அம்மா தன் கைப்பட எழுதிய பாடலை சாட்சியாக அளித்து, ஹரிவராசனம் பாடலை எழுதிய பெருமையை தக்க வைத்துக் கொண்டது ஜானகி குடும்பம். 

தற்போது திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவராகியுள்ள ஏ. பத்மகுமார், சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் 'ஹரிவராசனம்' பாடலை எழுதியதாகக் கருதப்படும் ஜானகி அம்மாவின் வழித்தோன்றல் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com