தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு சித்ரவதை: ரயான் சர்வதேசப் பள்ளி கொலை வழக்கில் நடந்த கொடூரங்கள்!

நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய குருகிராம் ரயான் சர்வதேச பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவன் பிரத்யுமன் தாக்கூர் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட அசோக்குமாரை காவல்துறையினர் சித்ரவதை... 
தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு சித்ரவதை: ரயான் சர்வதேசப் பள்ளி கொலை வழக்கில் நடந்த கொடூரங்கள்!

குருகிராம்: நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய குருகிராம் ரயான் சர்வதேச பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவன் பிரத்யுமன் தாக்கூர் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட அசோக்குமாரை காவல்துறையினர் சித்ரவதை செய்த விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

தில்லியை அடுத்துள்ள குருகிராம் ரயான் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த பிரத்யுமன் தாக்கூர் (7) என்ற மாணவன், அப்பள்ளியின் கழிப்பறைக்குள் கடந்த ஒரு மாதத்துக்கு முன் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டான். நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், அப்பள்ளி பேருந்து ஓட்டுநரின் உதவியாளரான அசோக் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் முயற்சியில், அவர் இக்கொலையை செய்ததாக விசாரணையில் குருகிராம் போலீசார் முதலில் தெரிவித்தனர்.

ஆனால் பிரத்யுமனின் பெற்றோர்கள் இதுவெறும் கண்துடைப்பு கைது என்று கூறியதுடன், சிபிஐ விசாரணை கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவன் கொலை வழக்கு, சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன், குருகிராம் ரயான் பள்ளியை நிர்வாகிக்கும் பொறுப்பு, குருகிராம் மாவட்ட நிர்வாகத்திடம் தாற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், மாணவன் பிரத்யுமன் தாக்கூர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பள்ளியில் படிக்கும் 16 வயது சக மாணவனை சி.பி.ஐ கைது செய்துது. படிப்பில் சுமாரான அந்த மாணவன் தேர்வுகளை தள்ளி வைக்கும் பொருட்டும், விரைவில் அப்பள்ளியில் நடக்கவிருந்த பெற்றோர் -ஆசிரியர் சந்திப்பை தள்ளி வைக்கவும் இந்த செயலில் ஈடுபட்டதாக சி.பி.ஐ தெரிவித்தது.

அதேசமயம் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, குருகிராம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அசோக் குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது நீதிபதி ரஜ்னி யாதவ் முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. பின்னர் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் விசாரணையில் ரூ.50000 மதிப்பு உறுதிப் பிணையில் அவருக்கு ஜாமின் அளிக்கப்பட்டது. சிறைத்துறை நடைமுறைகள் நிறைவு பெற்ற நிலையில் நேற்று மாலை குருகிராமின் போண்ட்ஸி சிறைச்சாலையிலிருந்து அசோக்குமார் ஜாமினில் விடுதலையானார். தான் மீண்டும் குடும்பத்துடன் இணையக் காரணமாக அமைந்த ஊடங்களை அவர் மிகவும் பாரட்டினார். 

இந்நிலையில் தான் செய்யாத ஒரு குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு அசோக்குமாரை காவல்துறையினர் சிறையில் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுதல் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைக ள் செய்ததாக அவரது மனைவி கூறியுள்ளார். 

இது குறித்து அசோக்கின் மனைவி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சிறையில் அவர் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி போலீசார் அவரை பலமாகத் தாக்கியுள்ளனர். அத்துடன் அவர் தலைகீழாக கட்டித் தொங்க விடப்பட்டுளார்.  அவரை கடுமையாக சித்ரவதைகள் செய்ததுடன்,  மூளைச்சலவை செய்யும் வகையில் பேசியுள்ளனர். பள்ளியில் ஒரு பெண்மணி அவரை சிறுவன் பிரத்யுமனின் உடலை கார் ஒன்றில் வைக்கச் சொல்லியுள்ளார். ஆனால் அதனை வைத்து போலீசார் தன்னை சந்தேகப்படுவார்கள் என்று அசோக் எண்ணவில்லை. சிறையில் போலீசாருக்கு அவருக்கு ஏதோ ஊசிகளையும் போட்டு மயக்க நிலைக்கும் உட்படுத்தியுள்ளார்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அசோக்கின் சகோதரி மற்றும் குடும்பத்தினர் இது பற்றி கூறியதாவது:

குற்றத்தினை ஒப்புக் கொள்ளுமாறு கூறிய போலீசார் இதன் காரணமாகஅவ்ருக்கு எதுவும் பிரச்னை வராது என்று தெரிவித்துள்ளனர். இது ஒரு சிறிய வழக்கு என்பதால் இதனை எப்படி பார்த்துக் கொள்வது என்று தங்களுக்குத் தெரியும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். ஒரு ஏழை மனிதனை அதிகார மட்டத்தில் மேலிருந்து அனைவரும் வருத்தியுள்ளனர். இதற்கான தணடனையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com