பாவனா கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்புக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகையை போலீஸார் புதன்கிழமை தாக்கல் செய்தனர்
பாவனா கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்புக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகையை போலீஸார் புதன்கிழமை தாக்கல் செய்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை பாவனாவை, கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி மர்மநபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தெரிகிறது. அதனை அவர்கள் செல்லிடப்பேசியில் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நடிகையை அவர்கள் காரிலிருந்து கீழே இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக, நடிகை அளித்த புகாரின்பேரில் கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக 'பல்சர்' சுனில் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்தனர். 
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு மலையாள நடிகர் திலீப்பே சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, நடிகர் திலீப்பை போலீஸார் கடந்த ஜூலை 10-ஆம் தேதி கைது செய்தனர். 85 நாள்கள் சிறை வாசத்துக்குப் பிறகு, அவருக்கு அங்கமாலி மாவட்ட நீதிமன்றம் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதனிடையே, இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்பட 7 பேருக்கு எதிராக காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகர் திலீப் உள்பட 5 பேருக்கு எதிராக அங்கமாலி நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை கொச்சி போலீஸார் புதன்கிழமை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் திலீப் 8-ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com