ஊடகங்களுக்குத் தடை உத்தரவு போட கேரள முதல்வர் பினராயி விஜயன் முயற்சி: ரமேஷ் சென்னிதலா தாக்கு

ஊடகங்களுக்குத் தடை உத்தரவு போட கேரள முதல்வர் பினராயி விஜயன் முயற்சி செய்வதாக அம்மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டினார்.

ஊடகங்களுக்குத் தடை உத்தரவு போட கேரள முதல்வர் பினராயி விஜயன் முயற்சி செய்வதாக அம்மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டினார்.
மத்திய பாஜக அரசு மற்றும் கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி அரசு ஆகியவை மோசமான ஆட்சியை நடத்தி வருவதாகக் கூறி அதைக் கண்டித்து ரமேஷ் சென்னிதலா, காசர்நோடு நகரில் இருந்து திருவனந்தபுரம் வரை கண்டனப் பேரணியை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் கோட்டயம் நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பெண் செய்தியாளர் ஒருவரிடம் முன்னாள் அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் அவதூறாகப் பேசியது தொடர்பாக நீதி ஆணையம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணை அறிக்கையை அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்வு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றனர். அப்போது அவர்கள் தலைமைச் செயலகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதன் மூலம் ஊடஙங்களுக்குத் தடை உத்தரவு போட முதல்வர் பினராயி விஜயன் முயன்றுள்ளார். மாநில அரசின் தலைமைச் செயலகத்துக்குள் செல்லவே தடை விதிக்கப்படுகிறது.
நூறு சதவீத எழுத்தறிவைக் கொண்ட இந்த மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்க முடியாது.கேரள வரலாற்றிலேயே முதல் முறையாக மாநில தலைமைச் செயலகத்துக்குள் ஊடகத்தினர் செல்ல அரசு தடை விதித்துள்ளது.
அதேவேளையில் அரசின் அத்துமீறல்கள் குறித்து செய்தியாளர்களும், அவர்களது சங்கங்களும் கருத்து கூறவில்லை. உங்களுக்கு (செய்தியாளர்கள்), முதல்வரின் செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணிக்கும் துணிச்சல் உள்ளதா? என்றார் ரமேஷ் சென்னிதலா.
முன்னதாக, நீதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க தலைமைச் செயலகத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற செய்தியாளர்களை பாதுகாப்புப் படைவீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த விவகாரம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த முதல்வர் பினராயி விஜயன் 'நானோ எனது எனது அலுவலகமோ செய்தியாளர்களைத் தடுத்து நிறுத்துமாறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com