நாடாளுமன்றத்தைக் கூட்ட அரசுக்கு உத்தரவிட வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை உடனடியாகக் கூட்ட மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. குஜராத் பேரவைத்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை உடனடியாகக் கூட்ட மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. குஜராத் பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டே கூட்டத் தொடரை நடத்தாமல் மத்திய அரசு தாமதித்து வருவதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 
இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன் காரணமாக அந்த மாநில அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. பாஜகவை மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து அங்கு முகாமிட்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, வழக்கமாக நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட வேண்டிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரானது இம்முறை தாமதமாகி வருகிறது. குஜராத் தேர்தலுக்காகவே கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த சூழலில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா, தீபேந்திர ஹூடா உள்ளிட்டோர் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று அண்மையில் அனுப்பப்பட்டது. நவம்பர் 21-ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவது வழக்கம். ஆனால், இம்முறை அதுதொடர்பாக எந்த அறிவிக்கையையும் மத்திய அரசு வெளியிடவில்லை. கூட்டத் தொடர் தாமதமாவதற்கு என்ன காரணம் என்பது குறித்த எந்த விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் தவறான முன்னுதாரணங்களாக அமைந்துவிட வாய்ப்புள்ளது. மத்திய அரசின் ஆக்கப்பூர்வமற்ற கொள்கைகளால் பல்வேறு எதிர் விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஒருவேளை நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் அதுகுறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாது என்பதற்காகத்தான் குளிர்காலக் கூட்டத் தொடரை அரசு தாமதப்படுத்தி வருகிறது. உடனடியாக கூட்டத் தொடரைக் கூட்ட குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com