ரூ.9,829 கோடி துணை நிதி நிலை அறிக்கை: ஒடிஸா அமைச்சரவை ஒப்புதல்

ரூ.9,829 கோடி மதிப்பிலான துணை நிதி நிலை அறிக்கையை நவ.28ஆம் தேதி தொடங்கும் சட்டப் பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய ஒடிஸா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ரூ.9,829 கோடி மதிப்பிலான துணை நிதி நிலை அறிக்கையை நவ.28ஆம் தேதி தொடங்கும் சட்டப் பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய ஒடிஸா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
புவனேசுவரத்தில் வியாழக்கிழமை நடந்த முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இன்னும் இருக்கும் 4 மாதங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட இந்த துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 
மேலும் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்று நிதியமைச்சர் சசி பூஷண் பெஹேரா தெரிவித்தார். 
ரூ.635 கோடி பாசனத் திட்டத்துக்கு அனுமதி: மாநிலம் முழுதும் சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்புக்குப் பாசன வசதி செய்து தரும் நோக்கில் ரூ.635 கோடி மதிப்பிலான நவகிருஷ்ண சௌத்ரி நீர்ப் பாசனத் திட்டத்துக்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருக்கிறது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு சட்டத் துறை அமைச்சர் பிரதாப் ஜெனா செய்தியாளர்களிடம் கூறியது:
இந்த நீர்ப்பாசனத் திட்டம் 3 ஆண்டு கால இடைவெளியில் செயல்படுத்தப்படும். இந்த புதிய திட்டத்தின் கீழ் 14 பெரிய, நடுத்தர மற்றும் 284 சிறிய பாசனத் திட்டங்களின் மூலம் பயன்பெற்று வந்த 46,296 ஹெக்டேர் நிலப்பரப்புக்கு மீண்டும் பாசன வசதியை ஏற்படுத்தித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் செயல்படும் 140 கல்லூரிகள், 11 பல்கலைக்கழகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உலக வங்கியிடம் இருந்து ரூ.1,071 கோடி கடனுதவி கோரும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இது தவிர, 1974-வன உயிரினப் பாதுகாப்பு ஒடிஸா விதிகளில் கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வன விலங்குகளால் உயிரிழக்கும் நபரின் குடும்பத்துக்குக் கிடைக்கும் இழப்பீடு அதிகரிக்கும். ரூ.3 லட்சமாக இருந்த இந்த இழப்பீடு தற்போது ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் ஜெனா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com