காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்

காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி விரைவில் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார். தீபாவளிக்குப் பிறகு ராகுல், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார்
காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்

காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி விரைவில் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார். தீபாவளிக்குப் பிறகு ராகுல், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
இப்போது, சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் இறுதியில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
எனவே, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள இருப்பது உறுதியாகிவிட்டது. இதன் மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தீபாவளிக்குப் பிறகு...: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சச்சின் பைலட் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைமையேற்க இதுதான் சரியான தருணம் என்ற கருத்து கட்சியில் வலுவடைந்துள்ளது. இப்போது, கட்சியில் அமைப்புரீதியாக தேர்தல் நடைபெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்பார். இதன் மூலம் கட்சியில் இளைஞர்களுக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே உறவு வலுவாக இருக்கும்.
சரியான தருணம் வந்துவிட்டது: காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்பது நீண்டகால எதிர்பார்ப்புதான். அதற்கான நடவடிக்கைகளும் சீராக நடந்து வந்தன. கட்சியின் துணைத் தலைவராக பல்வேறு சிறப்பான பணிகளை அவர் ஆற்றியுள்ளார். சரியான தருணத்தில் அவர் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. அந்தத் தருணம் இப்போது வந்துவிட்டது என்றார் பைலட்.
வாரிசு அரசியலுக்கு விளக்கம்: காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் அதிகம் இருப்பதாக குற்றம்சாட்டப்படுவது குறித்த கேள்விக்கு சச்சின் பைலட் அளித்த பதில்:
"ஒருவரது தந்தை அரசியல் தலைவராக இருக்கிறார் என்றால், அது அந்த நபருக்கு அரசியலில் ஒரு தொடக்கத்தை வேண்டுமானால் ஏற்படுத்தித் தரலாம். ஆனால், அரசியலில் வெற்றி பெறுவது என்பது அவரது செயல்திறனில்தான் அடங்கியிருக்கிறது. தங்களது பணிகளால் மக்கள் மனதைக் கவர்பவர் மட்டுமே அரசியலில் வெற்றி பெறவும், நீண்ட நாள்களுக்கு நிலைத்து நிற்கவும் முடியும். திறமையை மட்டும் கணக்கில் கொண்டுதான் அரசியல் வாரிசுகளை மக்கள் மதிப்பிடுகிறார்கள். தந்தையின் பெயர் மட்டுமே அரசியலில் பதவிகளைப் பெற்றுத் தந்துவிடாது. மேலும், அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது ஒரு தகுதிக் குறைவு அல்ல.
பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையா?: காங்கிரஸ் மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டை கூறும் முன்பு பாஜக தலைவர்கள் தங்களை சுயஆய்வு செய்து கொள்ள வேண்டும். பாஜக தலைவர்களில் பலர் அரசியல் சார்ந்த குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்தான். நான் வாரிசு அரசியலை ஆதரித்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம். அதே நேரத்தில் அரசியல் குடும்பத்தில் இருந்து வருபவர்களை நான் எதிர்க்கவும் இல்லை. அரசியலுக்கு வந்த பிறகு ஒருவரது தனிப்பட்ட திறமையும், தகுதியும்தான் அரசியலில் அவரது எதிர்காலத்தையும், வெற்றியையும் தீர்மானிக்கும் என்பதை உறுதிபடக் கூறுகிறேன். அரசியலில் வெற்றிபெற கடின உழைப்பு ஒன்றுதான் வழி. வேறு குறுக்குவழிகள் எதுவும் கிடையாது' என்றார்.
இளைஞர்களுக்கு வழி? காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள், இளைஞர்களுக்கு வழி விடும் நேரம் இது என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்கப்பட்டபோது, "யார் மற்றவர்களுக்கு வழிவிடுவது என்று எந்த கேள்வியும் இங்கு இல்லை. அனைவரும் இணைந்து பணியாற்றுவது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. பாஜகவைப் போல குறிப்பிட்ட வயதைக் கடந்தவர்களை ஓரம் கட்டுவது என்பது காங்கிரஸ் கட்சியில் இல்லை. அரசியலில் அனுபவம்மிக்க மூத்த தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடன் பயணிப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை. பாஜகவினரைப் போல மூத்த தலைவர்களை ஒதுக்கி மரியாதைக் குறைவாக நடத்த மாட்டோம்.
பாஜக மீது தாக்கு: காங்கிரஸ் கட்சியில் இளைய தலைமுறையினருக்கு மூத்த தலைவர்கள் ஆதரவாகவும், சிறந்த வழிகாட்டிகளாகவும் உள்ளனர். பாஜகவைப் போல மற்ற கட்சிகளை ஒழித்துவிட வேண்டும் என்ற கொள்கை காங்கிரஸýக்கு இல்லை. மற்ற கட்சியினர் மீதும், மாற்றுக் கருத்துடையவர்கள் மீதும் வெறுப்புணர்வைத் தூண்டும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபடாது. அரசியலில் எங்களுடன் போட்டியிடுபவர்களை எதிரிகளாகப் பார்க்க மாட்டோம். நாம் அனைவருமே ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளை மதிக்க வேண்டும்' என்றார் பைலட்.

பிரியங்கா அரசியலுக்கு வருவாரா?

ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் ஈடுபடுவாரா? என்ற கேள்விக்கு, "பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். எனினும், தீவிர அரசியலில் ஈடுபடுவதா? வேண்டாமா? என்பது அவரது தனிப்பட்ட விருப்பம்' என்று சச்சின் பைலட் பதிலளித்தார். பிரியங்கா காந்தி, தேர்தலின்போது சோனியா, ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com