நானும் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்: பாஜக எம்.பி. பூணம் மஹாஜன்

தான் உட்பட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும், ஏதோ ஒரு சூழ்நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பூணம் மஹாஜன் கூறியுள்ளார்.
நானும் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்: பாஜக எம்.பி. பூணம் மஹாஜன்


அகமதாபாத்: தான் உட்பட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும், ஏதோ ஒரு சூழ்நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பூணம் மஹாஜன் கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் நிறுவனத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பூணம் மஹாஜன், இதுபோன்ற மோசமான அனுபவங்களுக்கு சுய பச்சாதாபம் சரியான பதிலாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வோர்லியில் இருந்து வெர்சோவாவுக்கு படிக்கச் செல்லும் போது  ரயிலில்தான் செல்வேன். இந்த கிரகத்தில், குறிப்பாக இந்தியாவில் வசிக்கும் அனைத்துப் பெண்களும் இதுபோன்ற ஒரு துன்புறுத்தலை சந்தித்துத்தான் இருப்பார்கள். ஒவ்வொரு இந்தியப் பெண்ணும், தனக்கு எதிராக மோசமான விமரிசனத்தைக் கடந்திருக்க வேண்டும், அல்லது விரும்பத்தகாத சீண்டல்களை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களிலும் பெண் கடவுளை தொடர்புபடுத்துகிறோம். சில மரியாதையான விஷயங்களில் அமெரிக்காவுக்கே வழிகாட்டியாக இருக்கிறோம். அமெரிக்காவில் பெண் அதிபர் இல்லை. ஆனால் இந்தியாவில் பெண் அதிபர், பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர், முதல்வர்கள் என பெரிய பெரிய பதவிகளில் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த எல்லையை உடைத்தெறிய வேண்டும். இந்த மோசமான விஷயம் தொடருவதற்கு நாம்தான் காரணம். சுய பச்சாதாபம் காட்டுவது நம்முடைய தவறு. யாராவது தவறாக நடந்தால், அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்று சிந்திக்காமல், ஒரு அறை விடுங்கள் என்று கூறினார்.

இந்த உரையின்போது, மிக முக்கிய கருத்து ஒன்றையும் அவர் பகிர்ந்து கொண்டார். அதாவது, மாணவிகளும், ஏராளமான பெண் ஊழியர்களும் நிறைந்த அந்த அரங்கில், அவர் பேசுகையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பெண்களைப் பற்றி மோசமான எண்ணம் திணிக்கப்படுவதாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com