மும்பை நெரிசல் சம்பவம்: பூ விழுந்துவிட்டதை பாலம் விழுந்துவிட்டதாகப் புரிந்து கொண்டதுதான் காரணமா?

மும்பை எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, பூ விழுந்துவிட்டது என்ற பூ வியாபாரியின் அழுகைச் சத்தத்தை மக்கள், பாலம் விழுந்துவிட்டது என்று புரிந்து கொண்டதே காரணம் என கூறப்படுகிறது.
மும்பை நெரிசல் சம்பவம்: பூ விழுந்துவிட்டதை பாலம் விழுந்துவிட்டதாகப் புரிந்து கொண்டதுதான் காரணமா?


மும்பை: மும்பை எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, பூ விழுந்துவிட்டது என்ற பூ வியாபாரியின் அழுகைச் சத்தத்தை மக்கள், பாலம் விழுந்துவிட்டது என்று புரிந்து கொண்டதே காரணம் என கூறப்படுகிறது.

மும்பையில் கடந்த வாரம் எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில், கூட்ட நெரிசலில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பிய மாணவர் ஒருவர் கூறியது, விசாரணை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது, ரயில் நிலையத்தின் பாலத்தில் இருந்த பூ வியாபாரி ஒருவர் தனது கூடையில் இருந்த பூக்கள் விழுந்து விட்டதை சொல்லி அழுதுள்ளார். அதாவது பூ விழுந்து விட்டது என்பதை ஹிந்தியில் 'ஃபூல் கிர் கயா' என்று சத்தமாகக் கூறி அழுதுள்ளார். இந்த குரலைக் கேட்ட மக்கள் 'ஃபுல் கிர் கயா' (பாலம் இடிந்து விழுந்துவிட்டது) என்று தவறாக புரிந்து கொண்டனர். உடனடியாக பாலத்தில் இருந்த மக்கள் அங்கும் இங்கும் தப்பிச் செல்ல முயன்றதில் நெரிசல் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூத்த ரயில்வே அதிகாரி கூறுகையில், உண்மையிலேயே இந்த ஒரே ஒரு விஷயம்தான் கூட்ட நெரிசலுக்குக் காரணமா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவரும், பூ வியாபாரி ஒருவர் 'புல் கிர் கயா' என்று கத்தியதும் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

காயமடைந்த நபர்களிடமும், காயமடைந்தவர்களை மீட்டுச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவியவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம், ஒரு புரளி காரணமாகவே இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது என்பதை மட்டும் உறுதி செய்ய முடிகிறது.

அதே சமயம், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மற்றொரு பெண், இந்த பாலத்தில் மின் கசிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறியதால் அனைவரும் ஒரே சமயத்தில் முண்டியடித்துக் கொண்டு ஓடும் போது நெரிசல் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com