ஆர்.பி.ஐ, இஸ்ரோ உள்ளிட்ட 6000 நிறுவனங்களின் தகவல்கள் விற்பனைக்கு: அதிர வைத்த  இணையதள விளம்பரம்! 

இந்தியாவின் ஆர்.பி.ஐ, இஸ்ரோ உள்ளிட்ட 6000 முக்கிய நிறுவனங்களின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளது என  வெளியாகியுள்ள இணையதள விளம்பரம் ஒன்று  அரசு நிறுவனங்களை அதிர வைத்துள்ளது.
ஆர்.பி.ஐ, இஸ்ரோ உள்ளிட்ட 6000 நிறுவனங்களின் தகவல்கள் விற்பனைக்கு: அதிர வைத்த  இணையதள விளம்பரம்! 

புதுதில்லி: இந்தியாவின் ஆர்.பி.ஐ, இஸ்ரோ உள்ளிட்ட 6000 முக்கிய நிறுவனங்களின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளது என  வெளியாகியுள்ள இணையதள விளம்பரம் ஒன்று  அரசு நிறுவனங்களை அதிர வைத்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற இணையதள பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் க்யிக் ஹீலும் ஒன்று. அதன் துணை நிறுவனமான 'சீக்ரைட்' மற்றும் அதன் கூட்டாளி நிறுவனமான 'சிக்ட்ரீ' இரண்டும் இணைந்து நடத்திய இணையதளம் தொடர்பான பாதுகாப்பு ஆய்வுகளில், ஆபத்தான விளமபரம் ஒன்று தெரிய வந்துள்ளது.

சட்டவிரோதமாகச் செயல்படும் 'டார்க் நெட்' என்னும் இணையதள கட்டமைப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான ஆதார், ஐடியா டெலிகாம், மும்பை பங்குச் சந்தை, பிளிப் கார்ட், ஏர்செல்,  ஆர்பிஐ, பி.எஸ்.என் எல் , எஸ் பி ஐ உள்ளிட்ட 6000 நிறுவனங்களின் தகவல்கள் திருடப்பட்டு விற்பனைக்கு உள்ளதாகவும், அதற்காக இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.     

அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவன கணினிகளில் ஐ பி எனப்படும் அடையாள எண்ணையும் மாற்றி சேதங்களை உண்டாக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதியர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக அரசாங்கத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக க்யிக் ஹீலின் மூத்த மேலாண்மை இயக்குனர் ராகுல் ஸ்ரீவத்சவா கூறியதாவது:

எங்களுக்கு இந்த தகவல் தெரிந்த உடன் உடனடியாக தக்க சமயத்தில் அரசுக்கு தெரிவித்து விட்டோம். அந்த தளத்தில் தெரிவித்துள்ளபடி தகவல்களை யாரேனும் வாங்கி விட்டால் அது குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக அமையும். அத்துடன் இந்தியாவிலும் இணைய சேவையிலும் பெரும் பாதிப்பு ஏற்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடத்தப்பட்ட விசாரணையில் தேசிய இணைய பரிமாற்ற மையத்தின் கீழ் வரும் 'தேசிய இணைய பதிவகம்' இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதிவகத்தின் கீழ்வரும்  பாதிக்கப்பட வாய்ப்புள்ள அணைத்து நிறுவனங்களும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் முக்கிய சர்வர்களின் பாஸ்வோர்ட்களை  உடனடியாக மாற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com