வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்), வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) ஆகியவற்றில்
வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்), வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக இந்த வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ரிசர்வ் வங்கி இவ்வாறு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நிகழாண்டுக்கான நிதிக் கொள்கைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் நான்காவது நிதிக்கொள்கை அறிக்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வெளியிட்டார். 
இதில், ரெப்போ ரேட் விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே, அது 6 சதவீதமாகவே தொடர்கிறது. அதேபோல், ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படாததால் அதுவும் 5.75 சதவீதமாகவே உள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த வட்டி விகிதங்கள் குறையக்கூடும் என அனைத்துத் தரப்பினருமே எதிர்பார்த்திருந்தனர். 
எனினும், அவற்றில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை.
அதேநேரத்தில், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகைப் படிகள் உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, எதிர்வரும் மார்ச் மாதக் காலாண்டுக்கான பண வீக்க இலக்கினை 4.6 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இது, கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் 3.4 சதவீதமாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மதிப்பீட்டு அளவினை (ஜிவிஏ) 6.7 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. முன்பு, இதனை 7.3 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்தது.
பணவீக்கம் அதிகரிக்கும் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை: இந்நிலையில், விவசாயக் கடன்கள் தள்ளுபடி, மானியத் தொகை அதிகரிப்பு போன்ற அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தால், நாட்டின் பணவீக்கம் கடுமையாக அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதுகுறித்து நிதிக்கொள்கை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
நிகழ் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை அளவானது 3.2 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், விவசாயக் கடன்கள் தள்ளுபடி போன்ற அரசின் நடவடிக்கைகள் தொடரும்பட்சத்தில், மேற்குறிப்பிட்ட நிதிப் பற்றாக்குறை அளவில் 1 சதவீதம் குறைய வாய்ப்பிருக்கிறது.
அவ்வாறு, நிர்ணயிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை அளவில் 1 சதவீதம் குறையுமேயானால், நாட்டின் பணவீக்கம் 0.50 சதவீதம் அதிகரிக்கும். எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, சாலை, ரயில்வே, துறைமுகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அதிகம் செலவு செய்ததால், நிதிப் பற்றாக்குறை நிர்ணய அளவில் 96.1 சதவீதத்தை அரசு ஏற்கெனவே எட்டிவிட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com