இந்தியா-எத்தியோப்பியா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-எத்தியோப்பியா இடையே வர்த்தகம், தகவல் தொடர்புத் துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியா-எத்தியோப்பியா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-எத்தியோப்பியா இடையே வர்த்தகம், தகவல் தொடர்புத் துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணமாக ஜிபூட்டிக்கு கடந்த 3-ஆம் தேதி சென்றார். அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்த அவர், ஜிபூட்டியில் வாழும் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.
அதைத் தொடர்ந்து, அங்கிருந்து ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவுக்கு அவர் புதன்கிழமை சென்றார். அந்நாட்டு அதிபர் முலாட்டு தேஷோமுடன் அவர் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் பொருளாதார உறவுகள் குறித்து விவாதித்தனர்.
அப்போது, கடந்த 2015-இல் உருவாக்கப்பட்ட சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பில் (ஐஎஸ்ஏ) பங்கேற்றதற்காக எத்தியோப்பியாவுக்கு இந்தியா நன்றி தெரிவித்தது. சூரிய ஒளி ஆற்றல் வளத்தை அதிகமாகக் கொண்ட நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதும், சூரிய மின்சக்தியின் பயன்பாட்டை மேம்படுத்துவதும் இந்த அமைப்பின் நோக்கமாகும்.
எத்தியோப்பியாவுக்கு எரிசக்தித்துறை, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் இந்தியா ஆதரவு தருவது குறித்து ராம்நாத் கோவிந்த் விவாதித்தார். எத்தியோப்பியாவில் அன்னிய நேரடி முதலீட்டை அதிக அளவில் மேற்கொள்ளும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை அவர் சுட்டிக் காட்டினார். அதைத் தொடர்ந்து, இரு தலைவர்களின் முன்னிலையில், இந்தியா - எத்தியோப்பியா இடையே வர்த்தகம், தகவல் தொடர்புத் துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் இந்தியா-எத்தியோப்பியா வர்த்தக மன்றக் கூட்டத்தில் இரு தலைவர்களும் உரையாற்றினார். இந்த அமைப்பில் இந்தியாவைச் சேர்ந்த 100 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டத்தில் கோவிந்த் பேசுகையில், "வேலைவாய்ப்புகளை உருவாக்கியதன் மூலம் எத்தியோப்பியாவின் வளர்ச்சிக்கு இந்தியா பங்களித்துள்ளது. எத்தியோப்பியாவில் உற்பத்தித்துறையில் இந்திய முதலீடுகள் கணிசமான அளவில் உள்ளன. உள்ளூர் வளங்களுக்கு கூடுதல் மதிப்பாக அவை அமைந்துள்ளன' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com