சமாஜவாதி கட்சியின் 10-ஆவது தேசிய மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும், மூத்த தலைவர் முகமது ஆஸம் கானுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்த கட்சிப் பிரமுகர்கள்.
சமாஜவாதி கட்சியின் 10-ஆவது தேசிய மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும், மூத்த தலைவர் முகமது ஆஸம் கானுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்த கட்சிப் பிரமுகர்கள்.

சமாஜவாதி தலைவராக அகிலேஷ் மீண்டும் தேர்வு: பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நீட்டிப்பு

சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா நகரில் சமாஜவாதி கட்சியின் தேசிய அளவிலான மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு முன்னதாக, அக்கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில், சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், கட்சியின் தேசியத் தலைவரின் பதவிக்காலம் தற்போது உள்ள 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாகவும் இக்கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, வருகிற 2022-ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவ் பதவி வகிப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும், 2022-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையும் அகிலேஷ் யாதவ் தலைமையிலேயே அக்கட்சி சந்திக்கவுள்ளது.
கூட்டத்தைப் புறக்கணித்தார் முலாயம்: இந்த செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர், ஆக்ராவில் நடைபெற்ற சமாஜவாதி கட்சியின் தேசிய மாநாட்டில் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் அகிலேஷின் தந்தையும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் பங்கேற்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. அதேபோல், அகிலேஷுடன் மோதல் போக்கை தொடர்ந்து வரும் அவரது சித்தப்பாவும், முலாயம் சிங்கின் சகோதரருமான சிவபால் யாதவும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
முலாயம் வாழ்த்து - அகிலேஷ் நெகிழ்ச்சி: இம்மாநாட்டுக்கு தலைமை வகித்து அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
சமாஜவாதியின் தேசிய மாநாட்டுக்கு வருகை தருமாறு கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்குக்கு நான் அழைப்பு விடுத்தேன். இந்த மாநாட்டில், கட்சி சார்ந்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது என்பதால் தாங்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தினேன். ஆனால், அவர் இந்தக் கூட்டத்துக்கு வரவில்லை. இது, என்னை மிகவும் பாதித்தது.
எனினும், நான் இந்த மாநாட்டுக்கு வந்த சில நிமிடங்களில் முலாயம் சிங் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், உத்தரப் பிரதேசம் மட்டுமன்றி நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்தியதற்காகவும் அவர் நமக்கு வாழ்த்துகளைக் கூறினார். இதனை மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக நான் உணர்கிறேன் என்றார் அவர்.
முன்னதாக, உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு சமாஜவாதியில் உள்கட்சிப் பூசல் பூதாகரமாகியது. அப்போது, கட்சியின் தலைவரான முலாயம் சிங்கை அந்தப் பதவியிலிருந்து அகிலேஷ் யாதவ் நீக்கினார். பின்னர், தனது ஆதரவு எம்எல்ஏ-க்களின் பலத்தைக் கொண்டு கட்சியின் தலைவராக தம்மை அகிலேஷ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com