'நீட்' போராட்டத்துக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு 

தமிழகத்தில் 'நீட்' போராட்டத்துக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது. 
'நீட்' போராட்டத்துக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு 

தமிழகத்தில் 'நீட்' போராட்டத்துக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது. 
'நீட்' தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போராட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி, 'நீட் போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைமை இயக்குநர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், 'நீட்' போராட்டம் தொடர்பாக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. சட்டம், ஒழுங்கு முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது' என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 'நீட்' போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரத்தை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணை அக்டோபர் 9-ஆம் தேதி மீண்டும் நடைபெறும்' என்றும் தெரிவித்திருந்தது.
விசாரணை: இந்நிலையில், அந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி. ஓய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி, 'இந்த விவகாரத்தில், மக்களின் இயல்பு வாழ்க்கை, சட்டம், ஒழுங்கு ஆகியவை பாதிக்கப்படாத வகையிலான போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் பெண்கள், மாணவிகள் அதிகளவில் ஈடுபடுவதால் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்களை அதிகளவில் ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'நீட் தேர்வு போராட்டங்களுக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்படுகிறது' என்று தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com