18 வயதுக்கும் குறைவான மனைவியுடன் கணவர் தாம்பத்ய உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம்

'18 வயதுக்கும் குறைவான மனைவியுடன் கணவர் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது பாலியல் பலாத்காரம்; அது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் '' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
18 வயதுக்கும் குறைவான மனைவியுடன் கணவர் தாம்பத்ய உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம்

'18 வயதுக்கும் குறைவான மனைவியுடன் கணவர் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது பாலியல் பலாத்காரம்; அது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் '' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று வழக்குத் தொடுத்திருந்தது. அந்த வழக்கில், 'கணவர்-மனைவி இடையே தாம்பத்யம் வைப்பதற்கான பொதுவான வயது 18 ஆகும். 
இந்நிலையில், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 375-ஆவது பிரிவில் (பாலியல் பலாத்கார குற்றம் தொடர்பான சட்டம்) இருக்கும் விதிவிலக்கில், 15 வயதுக்கும் குறைவில்லாத மனைவியுடன், அவரது கணவர் தாம்பத்யம் வைப்பது பாலியல் பலாத்காரம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த விதிவிலக்கானது, வாழ்வதற்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், சிறார்களை சரிக்கு நிகராக நடத்த வேண்டும் என்ற விதி ஆகியவற்றுக்கு எதிரானதாகும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை புதன்கிழமை அளித்தது. அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
15 முதல் 18 வயது வரையிலான மனைவியுடன் கணவர், தாம்பத்யம் உறவு கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகும். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்திய தண்டனையியல் சட்டத்தின் 375-ஆவது பிரிவில் அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கானது, தன்னிச்சையானது. அது அரசியலமைப்புச் சட்டத்தின் 14,15,21 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது.
பாலியல் பலாத்காரம் தொடர்பான சட்டமானது, பிற சட்டங்கள் தொடர்பான தத்துவங்களுக்கு முரண்பாடாக உள்ளது. அது பெண் குழந்தைக்கு இருக்கும் உடல்ரீதியிலான இறையாண்மையை மீறுவதாகும்.
நாட்டில் தற்போதும் குழந்தை திருமண முறை நடைமுறையில் உள்ளது. அக்ஷய திருதியை போன்ற நாளில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தற்போதும் திருமணம் செய்து வைக்கப்படும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இது கவலையளிக்கிறது.
குழந்தை திருமண முறையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சமூக நீதிச்சட்டங்கள், சரியாக அமல்படுத்தப்படவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. எனவே, நாடு முழுவதும் தொடர்ந்து அமலில் இருக்கும் குழந்தை திருமண முறையை முடிவுக்கு கொண்டு வரத் தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
திருமணம் முடிந்தபிறகு, வல்லுறவு வைக்கப்படுவது குறித்த விவகாரத்தை பிரதிவாதிகள் எங்களிடம் எழுப்பவில்லை. ஆதலால், அந்த விவகாரத்துக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
நீதிபதி குப்தா தனியாக எழுதிய தீர்ப்பில், அனைத்துச் சட்டங்களிலும் திருமண வயது 18 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால் இந்திய தண்டனையியல் சட்டத்தின்கீழ் வரும் பாலியல் பலாத்காரம் தொடர்பான சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு, தன்னிச்சையானது, பெண் குழந்தைகளின் உரிமைகளை மீறுவதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com