அமித் ஷா மகன் தொடர்புடைய முறைகேடு விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்?: பிரதமருக்கு ராகுல் கேள்வி

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் தொடர்புடைய முறைகேடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்
அமித் ஷா மகன் தொடர்புடைய முறைகேடு விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்?: பிரதமருக்கு ராகுல் கேள்வி

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் தொடர்புடைய முறைகேடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தஹோத் மாவட்டத்தில் அவர் புதன்கிழமை சுற்றுப்பயணம் செய்தார். அதன் ஒரு பகுதியாக, அங்குள்ள தேவ்கத் பாரியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி என்ன பேசினார் என்று நினைவிருக்கிறதா? 'நானும் ஊழல் செய்ய மாட்டேன்; மற்றவர்களையும் ஊழல் செய்யவிட மாட்டேன்' என்று அவர் கூறினார். ஆனால், இப்போது அவரது கட்சியின் தேசியத் தலைவரின் மகனே ஊழல் முறைகேட்டில் சிக்கியிருக்கிறார். இதற்கு மோடி என்ன பதிலளிக்கப் போகிறார்?
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனம், ஓரிரு ஆண்டுகளிலேயே ஆயிரம் மடங்கு லாபம் ஈட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 2014-ஆம் ஆண்டு வரை, அந்த நிறுவனத்தின் விற்றுமுதல் (டர்ன் ஓவர்) வெறும் ரூ.50 ஆயிரமாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளிலேயே அதன் விற்றுமுதல் ரூ.80 கோடியாக மாறியுள்ளது. இது எப்படி சாத்தியம்? இந்த முறைகேடு குறித்து விசாரிக்கக் கூட மத்திய அரசு தயாராக இல்லை.
நாட்டின் சொத்துகள் திருடப்படாமல் தடுப்பதற்காக, நான் பிரதமராக இல்லாமல் காவலாளியாக (வாட்ச்மேன்) பணியாற்றுவேன் என்று மோடி கூறியிருந்தாôர். இன்று உங்கள் (மோடி) கண் முன்பாகவே இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளது. ஆனால், அதுகுறித்து நீங்கள் எதுவும் பேச மறுக்கிறீர்கள். இவற்றைப் பார்க்கும்போது, நீங்கள் காவலாளியா அல்லது அந்தத் திருட்டுக்கு கூட்டாளியா என சந்தேகம் எழுகிறது.
ஜெய் ஷாவின் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளால் மோடியும், அமித் ஷாவுமே ஆதாயம் அடைந்திருக்கிறார்கள். அதனால்தான், அதுகுறித்து அவர்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, நல்ல நாள்கள் வரப்போகிறது என்று மோடி கூறியது மக்களுக்கு அல்ல; அவர்களுக்குதான் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
மக்களை ஏமாற்றிய அவர்கள்(பாஜக), அதற்காக பெரிய விலையைக் கொடுத்தே தீர வேண்டும். எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவுக்கு மக்கள் கட்டாயம் பாடம் புகட்டுவார்கள். குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கல்வியும், சுகாதாரமும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார் ராகுல் காந்தி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com