சூரிய மின்தகடு ஊழல்: உம்மன் சாண்டிக்கு எதிராக விசாரணை- கேரள அரசு உத்தரவு

கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூரிய மின்தகடு ஊழல் விவகாரத்தில், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
சூரிய மின்தகடு ஊழல்: உம்மன் சாண்டிக்கு எதிராக விசாரணை- கேரள அரசு உத்தரவு

கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூரிய மின்தகடு ஊழல் விவகாரத்தில், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தில் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சூரிய மின்தகடுகள் பொருத்தித் தருவதாக கூறி, பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான நடிகை சரிதா நாயருடன் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக, நீதிபதி சிவராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சுமார் 214 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட இக்குழு, 970 ஆவணங்களையும் ஆய்வு செய்தது. பின்னர், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசிடம் தனது அறிக்கையை கடந்த மாதம் சமர்ப்பித்தது.
இந்நிலையில், பினராயி விஜயன் தலைமையில் கேரள அமைச்சரவையின் கூட்டம் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிபதி சிவராஜன் குழுவின் அறிக்கை மீது பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்துக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி நேரடியாகவும், தனது முன்னாள் அலுவலக ஊழியர் ஜிக்குமோன் ஜோசப் உள்ளிட்டோர் மூலமாகவும், சரிதா நாயரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக, சிவராஜன் குழுவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் உம்மன் சாண்டி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படும். அவரது முன்னாள் அலுவலக ஊழியர் ஜோசப்புக்கு எதிராக சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், உம்மன் சாண்டிக்கு ஆதரவாக ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், போலீஸ் விசாரணையை ஒடுக்க முயன்றதாகவும் மாநில உள்துறை முன்னாள் அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த ஊழலில் தொடர்புடைய தனியார் நிறுவனத்துக்கு உதவிய குற்றச்சாட்டில், முன்னாள் மின்துறை அமைச்சர் ஆர்யாந்தன் முகமதுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும். முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தம்பானூர் ரவி, பென்னி ஆகியோரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை சரிதா நாயர் சுமத்தியிருந்தார். அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும்.
நீதிபதி சிவராஜன் குழுவின் அறிக்கை, அடுத்த 6 மாதங்களுக்குள் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றார் பினராயி விஜயன்.
விசாரணையை எதிர்கொள்ளத் தயார்


தனக்கு எதிரான அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த உம்மன் சாண்டி, 'எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். நான் எந்த மோசடியும் செய்யவில்லை. 
விசாரணையை எதிர்கொள்ள எவ்வித அச்சமும் எனக்கில்லை. பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி என்னை வீழ்த்த நினைக்கின்றனர். ஆனால், நான் வலுவுடன் திரும்பி வருவேன்' என்றார்.

அரசியல் ஆதாயத்துக்காகவே, இதுபோன்ற முடிவை இடதுசாரி அரசு எடுத்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com