மும்பை நடைமேம்பால விபத்து: கூட்ட நெரிசலுக்கு மழையே காரணம்: விசாரணை அறிக்கையில் தகவல்

மும்பை ரயில்வே நடைமேம்பாலத்தில் கூட்ட நெரிசலால் 23 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மும்பை ரயில்வே நடைமேம்பாலத்தில் கூட்ட நெரிசலால் 23 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அந்தக் கூட்ட நெரிசலுக்கு பலத்த மழை பெய்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கு ரயில்வே பாதுகாப்பு தலைமை அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தற்போது தனது விசாரணை அறிக்கையை மேற்கு ரயில்வே பொது மேலாளர் அனில் குமாரிடம் புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது.
அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை குறித்து மேற்கு ரயில்வே அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 30 பேரிடம் அந்தக் குழு விசாரணை நடத்தியது. கூட்ட நெரிசலின்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ காட்சியையும் குழு ஆய்வு செய்தது. இதை அடிப்படையாகக் கொண்டு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 
அதில், எல்பின்ஸ்டோன் ரயில் நிலையப் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நாளன்று பலத்த மழை பெய்தது; இதனால் டிக்கெட் கௌண்டர்களில் இருந்த பயணிகள் மழையில் சிக்காமல் இருப்பதற்காக நடைமேம்பாலத்துக்குச் சென்றனர். இதனால், அங்கு ஏற்கெனவே நின்றிருந்த பயணிகள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதன் காரணமாகவே, அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் அதிகமான நேரங்களில் பயணிகள் அதிக பாரம் கொண்ட பொருட்களுடன், நடைமேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் அறிக்கையில் விசாரணை குழு பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, பயணிகளிடம் விற்பனை செய்வதற்காக உணவு உள்ளிட்ட தின்பண்டங்களைக் கொண்டு செல்லும் வியாபாரிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 
இதேபோல், நடைமேம்பாலத்துக்கு செல்லும் படிக்கட்டுகளை விரிவுபடுத்தும் வகையில், அதன் அருகே இருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், கூடுதலாக படிக்கட்டுகள் அமைக்கப்பட வேண்டும், அதிகாரிகள் விரைந்து தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வகையில், செல்லிடப் பேசி தவிர்த்து பிற தகவல் தொடர்பு வசதியை செய்து தர வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளையும் அக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது என்று மேற்கு ரயில்வே அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com