20 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து: கர்நாடக உயர் நீதிமன்றம்

கர்நாடக மாநிலத்தில் 20 பெண்கள் சயனைடு கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சயனைடு மோகன்குமாருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
20 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து: கர்நாடக உயர் நீதிமன்றம்


பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் 20 பெண்கள் சயனைடு கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சயனைடு மோகன்குமாருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 2009ம் ஆண்டு அனிதா(22) என்ற பெண் சயனைடு சாப்பிட்டு உயிரிழந்த நிலையில் பேருந்து நிலையத்தில் பிணமாகக் கிடந்தார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினருக்கு, இதேப்போன்று அந்த பகுதியில் பல பெண்கள் சயனைடு சாப்பிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.

அது பற்றி விசாரித்ததில், கடலோர கர்நாடக மாவட்டங்களில் மட்டும் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 20 பெண்கள் சயனைடு சாப்பிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் சுள்ளியா பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை சயனைடு கொடுத்து கொல்ல முயன்றதாக மங்களூரைச் சேர்ந்த மோகன்குமார் (53) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்த போது, அவர்தான் மேற்கண்ட 20 பெண்களையும் பலாத்காரம் செய்து சயனைடு கொடுத்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.

இது குறித்து மங்களூர் விரைவு நீதிமன்றம் விசாரித்து கடந்த 2013ம் ஆண்டு, அனிதா கொலை வழக்கில் மோகன்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 2 பெண்கள் கொலை வழக்கிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 4 பெண்கள் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அனிதா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மோகன்குமார் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவி மாலித், ஜான் மைக்கேல் டி குன்ஹா ஆகியோர் கொண்ட அமர்வு, அரசு தரப்பில் மோகன் குமாருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தும், அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.

சாரதா, ஹேமாவதி ஆகியோரின் கொலை வழக்குகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரியும் மோகன்குமார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதுவரை 7 பெண்களின் கொலை வழக்குகளில் மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பெண்களின் கொலை வழக்குகள் மங்களூரு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com