ஆருஷி கொலை வழக்கு: பெற்றோரை விடுவித்தது அலாகாபாத் உயர் நீதிமன்றம்

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் ஆருஷி என்ற 14 வயது சிறுமி, வீட்டு வேலைக்காரன் ஹேமராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அச்சிறுமியின் பெற்றோரை நிரபராதிகள் என்று
ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார். (கோப்புப் படம்)
ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார். (கோப்புப் படம்)

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் ஆருஷி என்ற 14 வயது சிறுமி, வீட்டு வேலைக்காரன் ஹேமராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த அச்சிறுமியின் பெற்றோரை நிரபராதிகள் என்று கூறி அலாகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்தது.
நொய்டாவில் பல் மருத்துவர்களாக ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் பணிபுரிந்து வந்தனர். இவர்களுடைய ஒரே மகள் ஆருஷி. இவர் தில்லியில் உள்ள பள்ளியில் படித்துவந்தார். அவரது வீட்டில் ஹேமராஜ் (45) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி நள்ளிரவில் ஆருஷியும், ஹேமராஜும் கொலை செய்யப்பட்டனர். 16-ஆம் தேதி ஆருஷியின் உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. ஹேமராஜ் மாயமானதால் அவர்தான் கொலை செய்திருப்பார் என்று போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.
இருப்பினும், அதற்கு மறுநாள் அதே வீட்டின் மாடியில் ஹேமராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 2 பேரும் 15-ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டது. ராஜேஷ் தல்வாரை போலீஸார் சந்தேகித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, இந்த வழக்கை உத்தரப் பிரதேச போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனம் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை வழக்கில், ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்த காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆருஷியின் பெற்றோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
அதை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பான இறுதித் தீர்ப்பு அக்டோபர் 12-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.
அதன்படி, வியாழக்கிழமை தீர்ப்பளித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஆருஷியின் பெற்றோரைக் குற்றவாளிகளாக அறிவிக்க முடியாது. எனவே, அவர்களை விடுவிக்கிறோம் என்று தெரிவித்தது.
இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக நூபுர் தல்வாரின் தந்தை தெரிவித்துள்ளார்.
வழக்கு கடந்து வந்த பாதை...
மே 16 (2008): ஆருஷி தல்வாரின் உடல் படுக்கை அறையில் கண்டெடுப்பு.
மே 17 : வேலைக்காரன் ஹேமராஜின் உடல் வீட்டு மாடியில் கண்டெடுப்பு.
மே 23 : ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் கைது.
ஜூன் 1 : வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைத்தார் அப்போதைய முதல்வர் மாயாவதி.
ஜூலை 12 : ராஜேஷ் தல்வாருக்கு ஜாமீன்
டிச. 29 : ஆருஷியின் பெற்றோர் குற்றவாளி என சிபிஐ அறிக்கை சமர்ப்பிப்பு.
நவம்பர், (2013) : பெற்றோரை குற்றவாளியாக அறிவித்து ஆயுள் தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம்.
செப்.7, (2017) : மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை அக். 12-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அக். 12 : பெற்றோர் விடுவிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com