கன்னையா உள்ளிட்டோர் மீதான ஜேஎன்யு-வின் ஒழுங்கு நடவடிக்கை நீதிமன்றத்தால் ரத்து

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் மற்றும் 14 மாணவர்கள் மீது அந்தப் பல்கலைக்கழகம் எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை தில்லி

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் மற்றும் 14 மாணவர்கள் மீது அந்தப் பல்கலைக்கழகம் எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.
2001-ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக, நிகழ்ச்சியை நடத்திய கன்னையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோர் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கிடையே, அந்த மூவர் உள்ளிட்ட 15 மாணவர்கள் மீது ஜேன்யு நிர்வாகம் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்தது.
அந்த மாணவர்களுக்கு பருவத் தேர்வுகளை எழுதுவதற்குத் தடை விதிப்பது, மாணவர் விடுதியிலிருந்து வெளியேற்றுவது உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்பட்டன.
இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்த்து மாணவர்கள் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
அந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி வி.கே. ராவ், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து தன்னிலை விளக்கமளிப்பதற்கு மாணவர்களுக்குப் போதிய வாய்ப்பு தரப்படவில்லை என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஜேஎன்யு நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்த நீதிபதி, இந்த விசாரணை தொடர்பான ஆவணங்களை தண்டனை பெற்ற மாணவர்கள் சரிபார்ப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும், இதுகுறித்து ஆறு வாரங்களுக்குள் மீண்டும் புதிதாக விசாரணை நடத்தி, முடிவெடுக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com