கல்வித் தரம் மேம்பட்டால் தேசம் முதன்மையடையும்: பிரணாப் முகர்ஜி

முதன்மையான தேசமாக இந்தியா உருவெடுக்க வேண்டுமென்றால் உயர் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கல்வித் தரம் மேம்பட்டால் தேசம் முதன்மையடையும்: பிரணாப் முகர்ஜி

முதன்மையான தேசமாக இந்தியா உருவெடுக்க வேண்டுமென்றால் உயர் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பல்வேறு பட்டமளிப்பு விழாக்களின்போது அவர் ஆற்றிய உரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரின் முயற்சியில் இந்நூல் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன் முதல் பிரதியை பிரணாபிடம் ஜாவடேகர் வியாழக்கிழமை வழங்கினார். தில்லி, ராஜாஜி மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரணாபின் இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அப்போது ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரணாப் முகர்ஜி கல்லூரி விரிவுரையாளராக இருந்தபோது அவரிடம் கல்வி பயின்றவர்கள் ஏராளம். கடந்த ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற குரு பூர்ணிமா நிகழ்ச்சியின்போது 700-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வை பிரணாபுக்கு அவர்கள் அளித்த குரு தட்சணையாகவே கருதத் தோன்றுகிறது.
பல்வேறு பட்டமளிப்பு விழாக்களில் பிரணாப் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அவை அனைத்தும் மிகச் சிறப்பான பேச்சுகள். அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதன் காரணமாகவே "குரு சங்க்ரஹ' என்ற புத்தகம் தற்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது என்றார் அவர். 
இதன் தொடர்ச்சியாக பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
நம் நாட்டின் பாரம்பரியமிக்க பல்கலைக்கழகங்களாக விளங்கிய நாளந்தா, தக்ஷசீலத்தில் கல்வி பயில உலக அளவில் அறிவார்ந்த மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்ததுண்டு. அதேபோல, அங்கு பணியாற்றவும் ஏராளமான ஆசிரியர்கள் விரும்பியதுண்டு.
தற்போது அதுபோன்ற நிலையை மீண்டும் அந்தப் பல்கலைக்கழகங்கள் அடைய வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாகவே உயர் கல்வியில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம். அத்தகைய அம்சங்களுடன் தரமான கல்வி இருந்தால்தான் முதன்மையான தேசமாக இந்தியா உருவெடுக்க முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com