பாட்னா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா: சத்ருஹன், லாலுவுக்கு அழைப்பு இல்லை

பாட்னா பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவுக்கு அதன் முன்னாள் மாணவர்களான பாஜக மூத்த தலைவர்கள் சத்ருஹன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா, ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத்

பாட்னா பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவுக்கு அதன் முன்னாள் மாணவர்களான பாஜக மூத்த தலைவர்கள் சத்ருஹன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா, ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி இவ்விழாவில் பங்கேற்கவுள்ளதால், மேற்குறிப்பிட்ட மூவரையும் வேண்டுமென்றே பல்கலைக்கழக நிர்வாகம் புறக்கணித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
பிகாரில் உள்ள பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா வரும் சனிக்கிழமை (அக்.14) நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், இந்த விழாவுக்கு அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களுமான சத்ருஹன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா, லாலு பிரசாத் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
பாஜகவில் இருந்தபோதிலும், அக்கட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை சத்ருஹன் சின்ஹாவும், யஷ்வந்த் சின்ஹாவும் முன்வைத்து வருகிறார்கள். அதேபோல், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர் லாலு பிரசாத். எனவே, இவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் வேண்டுமென்றே புறக்கணித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சத்ருஹன் சின்ஹாவிடம் செய்தியாளர்கள் வியாழக்கிழமை கருத்து கேட்டனர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:
பாட்னா பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவன் என்ற வகையில் இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் போலவே, அப்பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களான யஷ்வந்த் சின்ஹாவுக்கும், லாலு பிரசாத்துக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இது, அவர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்றார் சத்ருஹன் சின்ஹா.
அப்போது, பாஜகவுக்கு எதிராக கருத்துகளைக் கூறி வருவதால், இவ்விழாவிலிருந்து நீங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், அதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று பதிலளித்தார்.
இதுதொடர்பாக, பாட்னா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஷ் பிகாரி சிங் கூறுகையில், "விழாவுக்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால் சிலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com